“உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன்” (ரோமர் 15:22).

பரிசுத்த பவுல் ரோம திருச்சபையைச் சந்திக்க அநேக முறை முயற்சித்தும் அவருக்கு அது வாய்க்வில்லை. இந்தத் தடைக்குக் காரணம் யார்? இந்தத் தடையிலும் ஒரு அர்த்தம் உண்டு என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். தேவன் தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தும்படியான வேளைகளில், நாம் ஒரு காரியத்தை எண்ணி அதைச் செயல்படும்படியாக பிரயாசப்படும்பொழுது அதில் தடைகள் ஏற்படலாம். ஆனால் இதனால் நாம் சோர்ந்து போக வேண்டிய அவசியமில்லை. நம்முடைய முயற்சி தவறு என்று சொல்ல முடியாது, ஆனால் தேவன் ஒரு நோக்கத்தோடு இந்தக் காரியத்தை தடைப்பண்ணுகிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது. அவருடைய ஆளுகையின் படியே சகலமும் நடக்கிறது என்பதை அறிந்திருக்கிறோம். வாழ்க்கையில் தடைகள் ஏற்படலாம். அதினால் நாம் சோர்ந்துபோகவும் ஏதுவுண்டு. ஆனால் நம்மை வழிநடத்துகிற ஒரு தேவன் இருக்கிறபடியால் அவர் எல்லாவற்றையும் தம்முடைய தீர்மானத்தின்படி திட்டதின்படி செயல்படுத்துகிறவர். அவருடைய சித்தம் இல்லாமல் நம்முடைய வாழ்க்கையில் எந்தத் தடையும் நேரிட முடியாது. தடையை அகற்றுகிறவரும் அவரே. ஆகவே அந்தத் தடையையும் நன்மைக்கேதுவாகவே ஆண்டவர் செய்கிறவர். ஒருவேளை பிசாசு தடையைக் கொண்டுவந்தாலும் ஆண்டவருடைய அனுமதியில்லாமல் அது நமக்கு நேரிடுவது இல்லை. அந்தத் தடைகளிலும் ஆண்டவரே நீர் இதில் என்னை வழிநடத்தும் என்று அவரைச் சார்ந்திருப்பது மிக அவசியம். சோர்ந்து போகாமல் நாம் கர்த்தருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்க வேண்டும். அப்பொழுது அவர் ஏற்ற விதத்தில் ஏற்ற வழியில் காரியங்களைச் சரிப்படுத்துவார்.