செப்டம்பர்   6

‘பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு பயந்தார்கள்.’  (மாற்கு 5:15)

 தேவன் ஒவ்வொரு தனிமனிதனையும் நோக்கிப்பார்க்கிறவர். தனி மனிதன் தானே, என்று எண்ணி அலட்சியப்படுத்துகிறவர் அல்ல. இந்த உலகத்தின் ஒவ்வொரு மனிதனையும் அவர் அறிந்திருக்கிறார். தேவனின் உன்னத ஞானம் எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது பாருங்கள்! ஒவ்வொரு மனிதனின் நினைவுகளையும் அவர் அறிவார். ஒவ்வொரு மனிதனும் பிறந்த வேளையிலிருந்து, மரிக்கும்மட்டுமாக  அவன் நினைவுகள், செயல்களை, சிந்தைகளை, எண்ணங்களை அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார். இன்று நாம் ஜீவிக்கிறோம். நம்முடைய நினைவுகள் சிறியவைகளானாலும் பெரியவைகளானாலும் இன்றிலிருந்து பத்து வருடங்கள் கழித்து இதே நாளில், இதே மணி, நிமிடம், வினாடியில் நம் இருதயத்தில் என்ன எண்ணிக்கொண்டிருப்போம் என்பதையும் தேவன் அறிவார். ஆகவேதான் சங்கீதக்காரன், ‘இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.’ (சங் 139 : 6 ) என்று சொல்லுகிறார். அவர் சர்வ ஞானமுள்ளவர். இந்த சர்வ ஞானத்தை கொண்டே சகலத்தையும் நடப்பிக்கிறவர்.

மேலே சொல்லப்பட்ட வசனப்பகுதியில் ஆண்டவராகிய இயேசு ஒரே மனிதனுக்காக கடலின் அக்கரைக்குச் செல்லுகிறதைப் பார்க்கிறோம். எல்லாரும் பயந்து விலகிப் போய்க்கொண்டிருந்த மனிதனை நோக்கி இயேசு போனார். அவன் கல்லுகளால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்த  மனிதன். இந்த மனிதனைத் தேடியே இயேசு கடலின் அக்கரைக்கு வந்தார்.

உன்னுடைய வாழ்க்கையில், நீ எவ்வித மோசமான நிலையிலிருந்தாலும், எல்லா மனிதர்களும் உன்னைப் புறக்கணித்த நிலையிலிருந்தாலும் தேவன் உன்னையும் சந்திக்க, விருப்பமுள்ளவராயும், வல்லமையுள்ளவராயும் இருக்கிறார், என்பதை சந்தேகிக்காதே. இந்த நிலையில் இருந்த மனிதனை சுவிசேஷத்தை எடுத்துச் செல்லும் ஊழியனாக மாற்றினார். இயேசு உன்னையும் உபயோகமுள்ள  பாத்திரமாக மாற்றுவார் என்று நம்பு.