ஜனவரி 21 எல்லையில்லா ஈவுகள் 2கொரி 9:6-15
“தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்” (2கொரி 9:15).
தேவன் தம்முடைய மக்களுக்கு கொடுத்திருக்கிற ஈவு என்பது அளவற்றதாகும். இது வேதம் போதிக்கும் சத்தியமாக இருக்கிறது. இவ்வளவு மகத்துவமான அன்பை நாம் புறக்கணிப்பதே பெரிய பாவமாகும். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16) என்று வேதம் சொல்லுகிறது. தம்முடைய ஒரே குமாரனை தம்முடைய மக்களுக்காகக் கொடுத்திருக்கிறார் என்றால், அவருடைய அன்பை மனிதனால் விளங்கிக் கொள்ளமுடியாத அன்பாகும். இதுவே கடவுள் மனிதனுக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரிய ஈவாகும். இப்படியான மகத்துவமான செயலை நமக்காக தேவன் செய்திருக்கும்பொழுது தேவன் மற்றெல்லாவற்றிலும் நமக்கு நன்மை செய்யவே விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளலாம்.
அவருடைய கிருபைக்கு அளவில்லை என்றே நாம் சொல்லவேண்டும். “அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்” (யோவான் 1:16). தேவன் நமக்கு கொடுக்கும் கிருபையின் அளவு என்பது முடிவில்லாததாகும். இது அவருடைய பரிபூரணத்தில் நாம் பெற்றுக்கொள்ளும் வெகுமதியாகும். தகுதியில்லாத நமக்கு தேவன் இவ்வளவு நன்மைகளைச் செய்வாரானால் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாகக் காணப்படவேண்டும். ஆனால் நாமோ உலகக் காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு தேவனுடைய ஈவுகளை அவமதிக்கிறோம். நாம் அவருடைய கிருபையை விளங்கிக் கொள்ளும்பொழுது மிகுந்த மகிழ்ச்சியடைகிறவர்களாக கடவுள் மீது இன்னும் அதிகமான அன்பு வைப்பவர்களாகக் காணப்படுவோம்.