“ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” (நீதி 24:10).

நம் வாழ்க்கையில் ஆபத்து வராது என்று நாம் சொல்ல முடியாது. இந்த உலகத்தில் நாம் அநேக ஆபத்துக்களைக் கடந்து வாழ வேண்டியதாக இருக்கிறது. ஆனால் ஆபத்துக்காலத்தில் நாம் சோர்ந்து போக கூடுமா?  இயற்கையாக நம்முடைய வாழ்க்கையில் ஆபத்து வேளைகளில் சோர்ந்து போக வாய்ப்பு உண்டு. ஆனால் இதை நாம் எவ்விதம் மேற்கொள்வது? ஆபத்தை நான் நிச்சயமாய் கடந்து போக வேண்டியதாக இருக்கும். அதை நான் வெற்றியோடு கடந்து போக விரும்புகிறேன் என்று நீங்கள் சொல்வீர்களானால், உங்களுடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய விசுவாசம், பெலம் தேவை.  இந்த உலகத்தின் ஞானத்தினாலோ, மாம்சத்தினாலோ வாழ்க்கையில் நீங்கள் வாழ நினைக்கும்பொழுது, நீங்கள் சோர்ந்து போவது நிச்சயம். ஆனால் நீங்கள் ஒரு விசுவாசியாக இருப்பீர்களானால், இன்றைய வாழ்க்கையில் தேவன் உங்களை பலப்படுத்தவும், நீங்கள் தேவனிடத்திலிருந்து பலத்தைப் பெற்று வாழவும் அறிந்த ஒரு நபராக இருப்பீர்கள்.

தாவீதும் தன்னுடைய வாழ்க்கையில் சவுலினால் நெருக்கப்பட்ட நிலையில் “தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒரு நாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதைப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்” (1சாமு 27:1). நம் வாழ்க்கையில் நாம் ஆண்டவருடைய கிருபையைச் சார்ந்துகொள்ளத்  தவறினால் சோர்ந்து போவோம். விசுவாசமாய் நம்முடைய வாழ்க்கையில் பேசுவோம், நடப்போம். நம்முடைய வாழ்க்கையில் நாம் ஆவிக்குரிய தைரியம் உள்ளவர்களாகக் காணப்படவேண்டும்.  இந்த உலகத்தில் ஆண்டவர் நம் வாழ்க்கையில் ஆபத்தை அனுமதித்தாலும், அவருடைய சித்தமில்லாமல் அது நமக்கு வருவதில்லை. ஆனாலும் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்பொழுது நாம் ஆபத்திலும் நம்பிக்கையோடும் தைரியத்தோடும் வாழ முடியும்.