பிப்ரவரி 5

 “ஆவியிலே அனலாயிருங்கள்” (ரோமர் 12:11).

 ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்முடைய ஆவிக்குரிய அனலை நாம் எப்பொழுதும் காத்துக்கொள்வது மிகவும் அவசியம். நம்முடைய வாழ்க்கையில் இந்த அனலை அவித்துப்போடக் கூடிய அபாயம் உண்டு என்பதை  மறந்துவிடக் கூடாது. எரிந்துகொண்டிருக்கிற ஒரு மரக் கட்டை எரிந்து முடிந்தபின்பு, அது அணைந்து போவதற்கு முன்பாக வெறும் புகை காணப்படும். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நாம் எழும்பிப் பிரகாசிக்கும்படியாக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை  மறந்துவிட வாய்ப்புண்டு. அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள் என்றும் வேதம் சொல்லுகிறது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு அபாயம் என்னவென்றால், ஆவிக்குரிய சோம்பல். இந்தக் காரியம் நம்மை எப்போதும் பற்றிக்கொள்ள வாய்ப்புண்டு என்பதை அறிந்தவர்களாக ஜாக்கிரதையாக இருப்பது மிக மிக அவசியம். நீதிமொழிகள் 6:6-8 “சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும். கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.” இப்படிப்பட்ட ஒரு விழிப்பும் ஜாக்கிரதையும் அந்த சிறிய எறும்பில் பார்க்கும்பொழுது, நாம் கற்றுக்கொள்ளக்கூடிய அருமையான பாடம் உண்டு. “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்” (ரோமர் 12:11). இந்த உலகத்தில் மிக மிக உத்திரவாதமான பணி கர்த்தருடைய பணி. இப்பொழுது அநேக நேரங்களையும் காலங்களையும் கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்றால், அது  நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் இன்னும் அதிகமாக நம்மைத் தகுதிப்படுத்திக்கொள்ளவும், அவருடைய வார்த்தையிலும் ஜெபத்திலும் நாம் அதிகம் செலவிடவேண்டிய காலம் இது என்பதை மறந்துவிடக் கூடாது. என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிற ஒரு தேவன் உண்டு. அவர் எப்போதும் என்னைப் பார்த்துக்கொண்டிருகிறார் என்ற உணர்வை நாம் இழந்துவிடக் கூடாது. “நீ குளிருமல்ல அனலுமல்ல, குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமன்றி அனலுமின்றி வெதுவெதுப்பாய் இருக்கிறபடியினால், உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப் போடுவேன்” என்று தேவன் சொல்லுகிறார். இந்தக் காலத்திலும் நம்மை நாமே அனலாய்க் காத்துக்கொள்வது அவசியம். தேவனுடைய அன்பு நம்முடைய வாழ்க்கையில் எச்சரிப்பை அனுப்புகிறது. தேவனுக்காக அனலாய் எழும்புவோம்.