“நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்” (ஏசாயா 62:3).

தேவன் இந்த உலகத்தில் ஒரு பாவிக்காகக் கொண்டிருக்கும் திட்டங்களையும் நோக்கங்களையும் நாம் பார்க்கும்பொழுது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது!. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் கர்த்தருடைய கரத்தில் அடங்கியிருக்கும்பொழுது அவனைத் தேவன் எவ்விதமாய் உயர்த்துகிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது! ஏற்றக்காலத்தில் உயர்த்தும்படி அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கையில் இந்தக் காரியத்தை நாம் கற்றுக்கொண்டு, அவருடைய பலத்த கைக்குள் நாம் அடங்கியிருக்கும்பொழுது நிச்சயமாக மேலான காரியத்திற்கென்று அவர் நம்மை நியமித்திருக்கிறார். அதை செயல்படுத்துவார் என்ற உறுதியோடு நாம் வாழுவது அவசியம். கிரீடம் என்பது மகிமையைக் குறிக்கிறதாய் இருக்கிறது. தேவன் இந்த உலகத்தில் அற்பமானவைகளைத் தெரிந்து கொண்டு அவர்களை உன்னதமான நிலைக்கு உயர்த்துகிறார். ஆகவே கர்த்தருடைய கரத்தில் காணப்படுகிற ஒரு வாழ்க்கை எப்போதுமே மகிமைக்குரிய ஒரு பாத்திரமாக தேவன் அதை மாற்றுகிறார். அப்பொழுது நம்முடைய வாழ்க்கை தேவனுடைய மகிமையை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்துகிற அருமையான வாழ்க்கையாக மாறும். நாம் கர்த்தருடைய கரத்தில் நம்மை எப்பொழுதும் தாழ்த்தி ஒப்புக்கொடுத்து, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருப்போம். கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் மகிமையான காரியங்களைச் செய்வார்.