“அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்” (தானியேல் 6:16).

தானியேல் தான் சிங்கங்களின் கெபியிலே போடப்படுவேன் என்று அறிந்திருந்தும் தன் ஜெப வாழ்க்கையை கைவிடவில்லை. நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு சமயங்களில் ஆவிக்குரியக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறிவிடுகிறோம். பல வேலைகளின் மத்தியில் குடும்ப ஜெபங்களை தவிர்த்து விடுகிறோம். தேவனோடும் கொண்டிருக்கும் உறவை நாம் முக்கியப்படுத்துவதில்லை. ஆனால் தானியேல் தன்னுடைய வாழ்க்கையில் இந்த உலகத்தில் சட்டங்களினால் தன் ஆவிக்குரிய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வில்லை. அருமையானவர்களே! நாம் இந்த உலகத்திற்காகவும் மனிதர்களுக்காகவும் வாழ அழைக்கப்படவில்லை. தேவனுக்காக வாழும்படியாகவே அழைக்கப்பட்டவர்கள். இதை நாம் மறந்துவிடக் கூடாது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் தானியேலைப் போல சிங்கங்களின் கெபியிலே போடக்கூடிய சூழ்நிலையைப் போன்ற சவால்கள் இருக்கலாம். ஆனால் இவைகளின் மத்தியில் நாம் உலகத்திற்கும் மனிதனுக்கும் பயந்து செயல்பட கூடாது. ஒருவேளை அவ்வாறு நாம் செய்தால் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை பெலனற்றதாகக் காணப்படும். தானியேல் சிங்க கெபியில் போடப்பட்டது உண்மைதான். ஆனால் தானியேல் கூட தேவன் இருந்தார். அந்த சிங்கங்களின் வாயை அடைந்துபோட்டார். தேவனுக்காக நிற்கும் ஒரு மனிதனோடு தேவன் மிக நெருக்கமாக இருக்கிறார். அவன் ஒருநாளும் கைவிடப்பட மாட்டான். தேவன் நம்மோடு கூட இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் எந்தப் போராட்டத்திலும் நாம் வெற்றியுள்ளவர்களாகவே கடந்துபோக முடியும். தானியேல் சிங்கக் கெபியில் போடபட்டதினால், அந்த ராஜாவும் தானியேலின் தேவன் ஜீவனுள்ள தேவன் என்று அறிக்கையிட்டான்.