“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” (சங்கீதம் 119:11).

தேவனின் தடுத்து ஆட்கொள்ளும் அன்பு நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு மகத்துவமானது! நாம் ஒவ்வொரு நாளும் இதை அறிந்து தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமென்றால், நாம் தாவீதைப் பார்ப்போம். எவ்வளவு பெரிய தேவ மனிதன். ஆனால் அவனுடைய வாழ்க்கையில் பழைய பாவத் தன்மையின் காரியம் வெளிப்பட்டபொழுது, அவனை ஒரு கொடியவனாக, கொலைக்காரானாக அது மாற்றினது. சிம்சோன் தன்னுடைய இரண்டு கண்களும் குருடாய்ப் போன நிலையில் இரண்டு தூண்கள் மத்தியில் நின்றுகொண்டிருந்தபோது, அவன் தன் பாவத்தின் பயங்கர நிலையை உணர்ந்திருப்பான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் என்னை விட்டு நீங்க உதவி செய்யும் என்று பிதாவை நோக்கி ஜெபித்தார். ஆம் அவர் பாவம் செய்யவில்லை. ஆனால் நம்முடைய பாவத்தை அவர் சுமந்துகொண்டார். அந்தப் பயங்கரமான வேளையை தேவ குமாரனும் ஏற்றுக் கொள்ளக் கடினமாக இருந்தது. பாவம் அறியாத அவர் எனக்காகப் பாவமானார். அருமையானவர்களே! தேவனுடைய அன்பு நம்முடைய வாழ்க்கையில் நம்மைத் தடுத்து ஆட்கொள்ளவில்லை என்றால், நாம் மிகக் கொடியவர்களாய் மாறக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. நாம் நம்முடைய வாழ்க்கையில் நம் பாவத் தன்மையின் பயங்கரத்தை, அதின் அகோரத்தை அறியாமல் வாழக் கூடாது. நாம் எந்தளவுக்கு ஆண்டவருடைய சிலுவையின் பாடுகளையும், அவருடைய மகத்துவமான மீட்பையும் இரட்சிப்பையும் விலைமதிக்க முடியும்? என்னுடைய வாழ்க்கையின் பாவத்தின் பயங்கரத் தன்மையை உணர்ந்து வாழும்பொழுது மாத்திரமே. தேவனுடைய மீட்பு என்பது தேவன் நமக்கு பாவத்தின் ஆளுகையிலிருந்து கொடுக்கப்படுகிற விடுதலை. அவருடைய கிருபையினால் நீதியின் பாதையில் நடக்கதக்கதாக வழிநடத்துகிறார். அவருடைய இவ்விதமான ஒரு அன்பையும் கிருபையும் நான் பெற்றுக்கொள்வேன் என்றால் இது என்னுடையதினால் அல்ல. நான் அவரைத் தெரிந்துகொள்ளவில்லை, அவர் என்னைத் தெரிந்துகொண்டு இவ்விதமாக என்னுடைய வாழ்க்கையில் செயல்படுகிறார். கர்த்தருக்கு நாம் நன்றியுள்ளவர்களாகக் காணப்படுவோமாக.