“நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்” (யோபு 37:5).

      நம்முடைய தேவன் மிகப் பெரியவர், மகத்துவமுள்ளவர், உன்னதமானவர். ஆகவே அவர் நம் வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் செய்ய முடியும். “இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது” (யோபு 36:26) என்று வேதம் சொல்லுகிறது. இவ்வளவு பெரிய மகத்துவமான தேவன், அற்பமான மனிதர்களாகிய நம்மிடத்திலும் வல்லமையான காரியங்களைச் செய்பவராக இருக்கிறார்.

      நாம் கடவுளைப் பற்றியும் அவருடைய ஞானத்தைப் பற்றியும், வழியைப் பற்றியும்,  குணாதிசயத்தைப் பற்றியும் ஒருபோதும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. தேவன் நம்முடைய வாழ்க்கையில் அதினதின் காலங்களில் நேர்த்தியாக பெரிய காரியங்களைச், செய்பவராக இருக்கிறார். “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்” (பிரசங்கி 3:11). ஆகவே நாம் மகத்துவமுள்ள தேவனை  முழுமையாக நம்பி, அவரிடத்தில் நம்மை ஒப்புக்கொடுக்கும் பொழுது நம் வாழ்க்கையிலும் பெரிய காரியங்களைச் செய்ய வல்லவராக இருக்கிறார்.

      “பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது” (ஏசாயா 40:28) என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய சுயவிருப்பம் நிறைவேறவில்லையென்றால் சோர்ந்துவிடுகிறோம். ஆனால் நம்மை நேசிக்கிற கர்த்தர் நம்முடைய நோக்கங்களுக்கு மேலாக உன்னதமான காரியங்களைச் செய்ய விருப்பமுள்ளவராக இருக்கிறார். ஆகவே நாம் அவருடைய அன்பை சார்ந்து வாழுவதில் ஒருக்காலும் தவறிவிடக்கூடாது. கர்த்தருக்கு காத்திருப்போம். கர்த்தர் அதினதின் காலங்களில் நேர்த்தியாக காரியங்களைச் செய்வார்.