கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 28                                சத்தியத்தை புறக்கணித்தல்                                 2 தீமோ 4 : 1 – 8

சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்கு சாய்ந்து போகுங்காலம் வரும்.’

(2 தீமோ 4 : 4)

            இன்றைக்கு அநேகர் தேவனுடைய வார்த்தையை வாசிக்க தியானிக்க விரும்புவதில்லை. ஆகவே அநேக போதகர்கள் கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதைவிட பல கதைகளையும் பேசி சபையாரை மகிழ்விக்கப் பிரயாசப்படுகிறார்கள். அவ்விதம் பிரசங்கங்கள் என்ற பெயரில் கட்டுக்கதைகளைச் சொல்லி நேரத்தைப் போக்கும் பிரசங்கிமார்களையே ஜனங்களும் விரும்புகிறார்கள். ஆனால் உண்மையிலேயே இது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் சத்தியத்தின் வெளிச்சத்தை அவர்கள் புறக்கணிப்பதினால் இருளைத் தெரிந்துக்கொள்ளுகிறார்கள் என்பதையும் அறியாதிருக்கிறார்கள்.

            இதினிமித்தம் அக்கினிஜுவாலை ப் வைக்கோலை பட்டிசிப்பதை போலவும், செத்தையானது அக்கினிக்கு இரையாகி எரிந்து போவது போலவும் அவர்கள் வேர் வாடி, அவர்கள் துளிர் தூசியைபோல் பறந்து போகும்:. அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டைப் பண்ணினார்களே’ (ஏசாயா 5 : 24). எரேமியா தீர்க்கதரிசி தேவனுடைய மெய்யான வார்த்தையை இஸ்ரவேல் மக்களுக்கு எடுத்துச் சொன்னான். ‘அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்த சேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.’ (எரேமியா 6 : 10)

            அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான், ( சங் 112 :1 )அதாவது கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு அதில் வாஞ்சையுள்ளவர்கள், மெய்யாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். சத்தியத்தை அறிகிற அறிவில் அவர்கள் வளருவார்கள். ஆனால் இன்றைய போதகர்களும் போதனைகளும் சத்தியத்தின் படியாய் இருப்பதில்லை. நீங்கள் விழிப்பாயிருக்காவிட்டால் உங்களுடைய வாழ்க்கையிலும் சத்தியமில்லாத போதனையைப் போதிக்கிற கள்ளப்போதகர்களின் படுகுழியில் விழுந்துவிடுவீர்கள். எச்சரிக்கையாயிருங்கள்.