ஆகஸ்ட் 5
“குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்.” (யோவான் 3:36)
ஒரு மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் அவன் ஜீவனை பெறாவிட்டால் லாபமென்ன? நீ இந்த உலகத்தில் அதிக புத்திசாலி என்று எண்ணப்படலாம். அதிக ஞானமாய் வாழ்ந்து, அநேக காரியங்களைச் சம்பாதித்த மனிதனென்று போற்றப்படலாம். உன்னுடைய பிள்ளைகளையெல்லாம் நன்றாக படிக்கவைத்து உத்தியோகத்தில் இருக்கும்படி அவர்களுக்கு நல்ல படிப்பைக்கொடுத்து உன் திறமையினால் செழிப்பாய் வாழ்ந்துக்கொண்டிருக்கலாம். உலக மக்கள், “வாழ்ந்தால் உன்னைப்போல வாழவேண்டும். என்று போற்றலாம், அல்லது உயர்ந்திருக்கலாம். ஆனால் உன்னைப் பார்த்து அதி முக்கியமான கேள்வி கேட்க நான் விரும்புகிறேன். மிக மிக அவசியமான கேள்வி இது. “நீ நித்திய ஜீவனை உடைய மனிதரா? இல்லையா? தயவு செய்து இந்த கேள்வியை அற்பமாக எண்ணாதீர்கள். இன்றைக்கு நீங்கள் பதில் கொடுக்க மறுப்பீர்களானால் கட்டாயம் இந்தக் கேள்விக்கு பதில் கொடுக்கும்படியான ஒரு நாளை, ஒரு வேளையை தேவன் வைத்திருக்கிறார்.
மேலும் வேதம் சொல்லும் ஒரு பெரிய உண்மை, நீ இந்த உலகத்தின் நாட்களில் நித்திய ஜீவனைப் பெறவில்லையென்றால், மரணத்திற்குப் பின்பாக அதைப் பெறமுடியாது. நித்திய ஜீவனைப் பெற என்ன செய்ய வேண்டும்? தேவ குமாரனை நோக்கிப்பார். மனிதனுடைய பாவ நிவாரணபலியாகத் தன்னை ஒப்புக்கொடுத்த இரட்சகரை நோக்கிப்பார். ஆண்டவரே! எனக்கு நித்திய ஜீவனைத் தாரும். எனக்கு எல்லாவற்றைக்காட்டிலும் இதுவே முக்கியமான தேவை.” என்று விசுவாசத்தோடு ஜெபி. என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று சொன்ன இரட்சகர் பொய் சொல்லுபவரல்ல. அவரிடத்தில் மெய்யான இருதயத்தோடு வந்த ஒருவரும் அவ்விதம் வெறுமையாய்ப் போனதில்லை. இல்லையென்றால் தேவகோபம் உன் மேல் நிலை நிற்கும் என்று வேதம் சொல்லுகிறது.