பிப்ரவரி 21

“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9)

பாவ அறிக்கையின் ஜெபம் நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவரும்  நன்மைகள் அளவிடப்பட முடியாதவைகள். நம்முடைய பாவங்களை உணராமல்,  தேவனிடம் ஒப்புரவாகாமல் வாழுவது, நம்முடைய இருதயத்தைக் கடினப்படுத்தும். பாவம் வஞ்சனையுள்ளது. நம்முடைய இருதயத்தை அது அதிகக் கடினப்படுத்துகிறது. பாவ அறிக்கை நாம் செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் நமக்காக மரித்த இயேசு கிறிஸ்துவின் பலியை நாம் ஏற்றுக்கொள்கிறோம். தகுதியில்லாத நமக்கு எவ்வளவு பெரிய கிருபை! எவ்வளவு பெரிய அன்பு இரக்கம் என்பதை குறித்து நாம் ஆச்சரியப்படுகிறோம். நாம் பாவத் தன்மையுள்ளவர்கள் என்று உணர்வதினால் நமக்கு இரட்சகர் தேவை என்பதின் அவசியத்தை  உணருகிறோம். நாம் பாவம் செய்யக்கூடிய தன்மையுள்ளவர்களாய் இருப்பதினால், இரட்சிப்பின் ஆரம்பத்தில் நாம் நம்முடைய பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்புகிறது மாத்திரமல்ல, ஒவ்வொரு நாளும் நாம் மனந்திரும்பும்படியாக நியமிக்கப்பட்டிருக்கிறோம். இது நமக்கு மிக முக்கியமான காரியத்தை உணர்த்துகிறது. அதென்னவென்றால் நம்முடைய வாழ்க்கையில் இரட்சகரின் அவசியம் ஒவ்வொரு நாளும் நாம் உணர்ந்து அதின் அடிப்படையில் வாழுகிறவர்களாக இருக்கிறோம். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் அதை நமக்கு மன்னிக்கிறதற்கு அவர் உண்மையும் நீதியுமுள்ளவராய் இருக்கிறார். பாவம் எப்போதும் பாரமானது. அறிக்கையிடாத பாவத்தின் விளைவு, நாம் ஆண்டவரை விட்டு விலகிச் செல்லக்கூடிய அபாயம் உண்டு. ஆனால் நம்முடைய வாழ்க்கையில் நாம் பாவி என்ற சொல்லும்பொழுது அது இரட்சகரின் அவசியத்தை உணர்த்துகிறது மாத்திரமல்ல ஆண்டவர் மேல் கொண்டிருக்கின்ற அன்பை அதிகரிக்கச் செய்யும். நம்முடைய கடினமான இருதயம் ஆண்டவருடைய அன்பை உணராமல் இருக்கச் செய்கிறது. பவுல் “கிறிஸ்துவின் அன்பு என்னை நெருக்கி ஏவுகிறது என்று சொல்லுகிறார்”. அநேகர் தங்களுடைய பாவங்களை உணர்ந்து அதை அறிக்கைசெய்யாத ஒரு வாழ்க்கையைக் கொண்டிருப்பதினால் தேவனின் விலையேறப்பெற்ற இரட்சிப்பின் கிரயத்தை உணராமல் வாழுகிற அபாயம் உண்டு. இதன் நிமித்தமாக நாம் ஆண்டவரை முழு இருதயத்தோடு நேசிக்க முடிவதில்லை. ஆகவே பாவ அறிக்கை ஆண்டவரை அதிகமாக நேசிக்க நமக்கு உதவிச் செய்கிறது.