கிருபை சத்திய தின தியானம்

ஜுலை 22               உமக்குச் சித்தமானால்              மத் 8:1–10

‘அப்பொழுது  குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைபணிந்து;

ஆண்டவரே! உமக்குச் சித்தமானால்,

என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்’ (மத் 8 : 2)

        இந்த மனிதனின் மேலான ஆவிக்குரிய விசுவாசத்தையும், தன்மையையும் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு காலம் இந்தவியாதியினால் பீடிக்கப்பட்டிருந்தான் என்பது நமக்குத்தெரியாது. ஆனால் இவனை இங்கு ‘குஷ்டரோகி’ என்று அழைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். அந்த நாட்களில் குஷ்டரோகம் கடுமையான வியாதியாக இருந்தது, மிகவும் கொடியது. அதில் பாதிக்கப்பட்டவர்கள் ஊருக்கு உள்ளே கூட அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆகவே அவர்கள் வியாதியே ஒர் கொடியது என்றாலும், சமுதாயத்தின் புறக்கணிப்பு மறுப்பக்கத்தில் வேதனையாக இருந்தது. அவ்விதமான ஒரு மனிதன் இயேசுவினிடத்தில் வந்து அவரைப் பணிந்து கொள்ளுகிறான். அவன் வியாதியின் கொடுமையினிமித்தம் தன்னை சுகப்படுத்த வேண்டும் என்று இயேசுவினிடத்தில் கேட்காமல் ‘ஆண்டவரே! உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்’ என்றான்.

    இவன் இதின் மூலம் இரண்டு காரியங்களை அங்கிகரித்தான். ‘முதலாவது தேவனுடைய சித்தம், இரண்டாவது தேவனுடைய வல்லமை, தேவனுடைய சித்தம் நன்மையானது’ (ரோமர் 12 : 2) என்று பார்க்கிறோம். இன்றைக்கு அநேகர் தேவனுடைய சித்தத்தை தேடினால் ஒருவேளை அது என்னுடைய சித்தத்திற்கு ஏற்றதாக இருக்காதோ என்று எண்ணுகிறார்கள். தேவனுடைய சித்தம் நன்மையானது. பூரணமானது. அதைத்தேடி அதற்கு ஒப்புக்கொடுப்பதே நம்முடைய வாழ்க்கையில் நல்லது.

    அந்த மனிதன் தேவனுடைய வல்லமையையும் அறிந்திருந்தான். அவனுடைய வியாதி கொடியதுதான் ஆனால் தேவனுக்கு அது  ஒரு பொருட்டல்ல என்பதை விசுவாசித்தான். உன்னுடைய பிரச்சனை எவ்வளவு கொடியதாக இருந்தாலும், தேவனுடைய வல்லமையை சந்தேகிக்காதே. இவை இரண்டையும் அங்கிகரித்த அந்த குஷ்டரோகி அந்தக் கொடியவியாதி நீங்கினவனாய் திரும்பி சென்றான். எப்போதும் தேவனுடைய சித்தத்தில் நன்மை உண்டு என்பது, உன்னை அவருடைய நீதியைத் தேட உற்சாகப்படுத்தட்டும்.