“நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்” (நீதிமொழிகள் 29:2).

நீதிமான்கள் பெருகும்பொழுது இந்த உலகத்தில் தேவனுடைய பிரசன்னத்தைக் கொண்ட அவர்களுடைய வாழ்க்கை மிகப் பெரிய ஆசீர்வாதமாக இருக்கும். ஏனென்றால் தேவன் அவர்களோடு கூட இருக்கிறார். அவர்கள் பெருகும்போது ஆண்டவருடைய பிரசன்னமும் பாதுகாப்பும் அதிகமாய்க் காணப்படும். அவர்கள் தேவனோடு கொண்டிருக்கிற தொடர்பு, ஜெபம் வேதத்தை அறிகிற அறிவு, அவர்களின் மூலமாக செய்யப்படுகிற கர்த்தருடையப் பணி, போன்றவைகளால் நீதிமான்களின் பெருக்கம் இந்த தேசத்தில் ஆசீர்வாதமாக இருக்கும். அவர்களைச் சுற்றியிருக்கிற மக்களுக்கும் தங்கள் சொந்த மக்களுக்கும் அவர்கள் ஆசீர்வாதமாகக் காணப்படுவார்கள். அந்த இடத்தில் மகிழ்ச்சி இருக்கும். ஆனால் துன்மார்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள். தேவனை அறியாத மக்கள் இந்த உலகத்திற்கு உரியவர்களாய் வாழுகிறபடியால், இந்த உலக ஞானத்தைக் கொண்டு அவர்கள் செயல்படுகிறவர்களாய் இருப்பார்கள். அவர்கள் ஆளும்போது ஜனங்கள் தவிப்பார்கள். ஏனென்றால் அங்கு தேவனுடைய பிரசன்னமும் ஞானமும் இல்லை. மேலும் அங்கு தேவனுடைய ஆசீர்வாதம் இல்லை. ஆகவே ஒரு தேசத்தில் கர்த்தருக்குப் பயப்படுகிற ஜனங்கள் ஆளுகை செய்கிற ஆசீர்வாதம் என்பது ஒரு மெய்யான ஆசீர்வாதம். அதில் நிச்சயமாக தேவனுடைய மக்கள் சந்தோஷப்படுவார்கள். அதில் ஆண்டவருடைய ஆளுகையும் சந்தோஷமும் சமாதானமும் நிலைத்திருக்கும். ஆனால் துன்மார்க்கரின் ஆளுகையில் ஜனங்கள் தவிப்பார்கள். அவர்கள் தேவனை உண்மையான விதத்தில் அறியாதவர்களும், பேய்த்தனத்திற்கு அடுத்தவர்களுமாய் அவர்கள் காணப்படுவதின் நிமித்தமாக அவர்கள் ஆளும்போது குழப்பமும் தவிப்பும் காணப்படும். ஆகவேதான் நம் தேசத்தின் தலைவர்களுக்காகவும் ஜெபிப்பதைக் குறித்து வேதம் நமக்கு கட்டளையிடுகிறது. அவர்களுக்காக நாம் ஜெபிப்பது நல்லது.