பிப்ரவரி 13

“நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது” (1 யோவான் 1:10).

பாவ அறிக்கையின் ஜெபமானது, தேவனுக்கும் நமக்கும் இடையில் துண்டிப்பு இருக்குமானால், உறவு சரியாக இல்லையென்றால், அதைச் சரி செய்கின்றதாய் இருக்கிறது. இது மிக மிக முக்கியமானது. நம்முடைய வாழ்க்கையில் தேவனோடு கொண்டிருக்கிற தொடர்பில் நாம் சரியாக இருப்பது மிக மிக அவசியம். அநேகர் அதைக் குறித்துச் சிந்திப்பதில்லை. நம்முடைய வாழ்க்கையில் இதைக் குறித்து அதிக ஜாக்கிரதையாய் இருந்து தேவனோடு கொண்டிருக்கும்படியான தொடர்பை நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் காத்துக்கொள்ள உத்திரவாதிகளாய் இருக்கிறோம். தேவனுடைய வார்த்தை ஒருக்காலும் பொய்சொல்வதில்லை. தேவன் தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கென்று சம்பாதித்த பாவ மன்னிப்பை நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கிறவர்களாய்க் காணப்படுவோம். சிலர் நான் என் பாவத்தை குறித்து எண்ணும்போது அது இன்னும் குற்றவுணர்வை ஏற்படுத்தும் என்று பயப்படுகிறதுண்டு. ஆனால் அது உண்மையல்ல. நம்முடைய பாவங்களை உண்மையான மனதோடு அறிக்கையிடும்போது கர்த்தர் நீதியும் உண்மையுமாயிருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. இது ஒரு விசுவாசிக்கு தேவன் சொல்லும்படியான காரியம். நாம் பல விதங்களில் நம் பரிசுத்த அளவில் குறைந்துவிடுகிறோம். ஆனால் இதை நாம் உணர்ந்து கழுவப்படும்பொழுது சுத்திகரிக்கப்பட்ட பாத்திரங்களாய் நம்முடைய மனசாட்சியில் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவர்களாய் காணப்படுவதற்கு அதிக உதவியாயிருக்கும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். ஆகவே நம்முடைய பாவங்களைக் குறித்து வருத்தப்பட்டு அதை அறிக்கைசெய்து மனந்திரும்பும்போது, மறுபடியும் அந்தப் பாவத்தை செய்யக்கூடிய சூழ்நிலைவரும்போது அதைக் குறித்து நாம் எச்சரிப்புள்ளவர்களாய் காணப்படுவோம். அநேக வேளைகளில் நாம் இதை உணராமல் இருப்போம். ஆனால் நம்முடைய பாவங்களைக் குறித்து உணராமல் அதை அறிக்கைசெய்யாமல் இருக்கும்பொழுது  நம்முடைய ஜெபத்திற்கு அவைகள் தடையாக இருக்கும். ஆகவே நம்மைக் குறித்து ஆராய்ந்து நம் பாவங்களை அறிக்கை செய்து தேவனிடத்தில் மன்னிப்புக் கேட்பது நமக்கு உகந்த ஜெபமாகக் காணப்படும்.