“நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்” (ஓசியா 14:4).  

நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவருடைய சத்தியத்தை அறிந்திருந்தாலும் அநேக சமயங்களில் சீர்கெட்டவர்களாக நடக்கிறோம். ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார், நான் அதை குணமாக்குவேன் என்று. ஒருவேளை நமக்கு எதிராக சிலர்  தவறு செய்துவிட்டால், அவர்கள் மன்னிப்புக் கேட்டால் நாம் மன்னிக்கிறோம் என்று சொன்னாலும் அந்தக் காரியத்தை நாம் சுலபமாக மறக்க முடிவதில்லை. முழு மனதோடு அவர்களை மன்னிக்க முடிவதில்லை. ஆனால் ஆண்டவர் இங்கு சொல்கிறார், நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன் என்று. ஒரு பாவிக்கு தேவனைப் போல நம்பிக்கைக்கு உரிய இடம் வேறுண்டோ? அவரைச் சார்ந்துகொள்ளுகிறதைப் போல நமக்கு நம்பகரமான ஒரு அடைக்கலம் வேறில்லை. மனப்பூர்வமாய் நம்மை சிநேகிக்கிறவர் ஒருவர் உண்டு. அவர் நம்முடைய கடந்த கால பாவங்களை மன்னித்தவர் மாத்திரமல்ல, அவைகளைக் கடலின் ஆழங்களில் போட்டுவிட்டார். நான் இனி அதை நினைப்பதில்லை என்றும் சொல்லுகிறார். மனிதனுக்கும் தேவனுக்கும் எவ்வளவு வித்தியாசம்! நமக்கு மிக நம்பிக்கை கொடுக்கக்கூடிய ஒரு அருமையான தேவனுடைய தன்மையை நாம் இதில் பார்க்கிறோம். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரையே அண்டிக்கொள்வோம்.