“உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்” (சங்கீதம் 119:17).

அனுகூலமாயிரும் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். அதாவது என்னுடைய வாழ்க்கையில் ஆண்டவரே உம்முடைய கிருபையின் செயல்பாட்டை முழுமையாக அதிமாகச் செய்தருளும் என்பது அதின் அர்த்தம். நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய கிருபையின் செயல்பாடுகள் அதிகம் தேவை. அப்பொழுது மாத்திரமே நாம் பிழைத்திருக்க முடியும். நம்முடைய சொந்த முயற்சியினால் நம் ஆவிக்குரிய வாழ்க்கையை வாழ முடியாது என்பதை விளங்கிக்கொள்வது முதல் காரியம். இரண்டாவதாக, அவ்விதமாய் நம் முடியாமையை உணரும்பொழுது கர்த்தரை அதிகமாய்ச் சார்ந்து கொள்ளுவோம். நம்முடைய வாழ்க்கையில் எந்தளவுக்கு நம் முடியாமையை உணருகின்றோமோ அந்தளவுக்கு நாம் தேவனைச் சார்ந்து கொள்ளுவோம். நம்முடைய வாழ்க்கையில் நம் ஆத்துமா வாழுகிறது என்பது தேவனுடைய அனுக்கிரகத்தின் மூலமாகவே என்பதை விளங்கிக்கொள்வது அவசியம். நம்முடைய ஞானத்தினாலும் பெலத்தினாலும் கர்த்தருடைய வார்த்தையை நாம் பின்பற்ற முடியாது. “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று வேதம் தெளிவாய்ச் சொல்லுகிறது. இந்த இடத்தில் சங்கீதக்காரன் சொல்லுகிறது என்னவென்றால், ஆண்டவருடைய திரளான கிருபை எனக்குத் தேவை. அப்பொழுது நான் பிழைத்திருப்பது மாத்திரமல்ல, ஆண்டவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுவேன் என்று சொல்லுகிறான். நம்முடைய வாழ்க்கை தேவனுடைய வசனத்தின் படி கட்டப்படுகிற வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையை தேவ வசனத்தின்படி கட்டுகிறோமா என்பதைக் குறித்து நாம் யோசித்துப்பார்ப்பது அவசியம். அப்படிப்பட்ட வாழ்க்கை என்றைக்கும் நிலைத்திருக்கும்.