பிப்ரவரி 26

“நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்” (சங்கீதம் 17:15).

என்ன ஒரு அருமையான ஆவிக்குரிய வாஞ்சை! நாம் நம்முடைய வாழ்க்கையில் பாவ வாஞ்சையைக் கொண்டிருக்கும்பொழுது, தேவனைத் தரிசிக்கும் விருப்பம் நமக்கு இருக்காது. தேவனை தரிசிக்க விரும்புகிறவர்கள் அவருடைய நீதியைத்  தரித்தவர்களாய் காணப்படுகிற ஒரு நிலையில், அவரை தரிசிக்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது. பாவத்தையும் உலகத்தையும் நாம் நேசிக்கும்பொழுது கர்த்தரை நாம் தரிசிக்க முடியாது. அவருடைய உண்மையான சாயலை நாம் நம்முடைய வாழ்க்கையில் கண்டு, அதை அறிந்து உணர்ந்து  வாழுவது என்பது கூடாத காரியம். ஆகவே நீதியில் மாத்திரமே நாம் தேவனை தரிசிக்க முடியும். தேவனுடைய சத்தியத்தின் வழியாக மாத்திரமே தேவனை தரிசிக்க முடியும். மேலும் சங்கீதக்காரன் சொல்லுகிறார் “நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்” என்று. ஆண்டவரே என்னுடைய வாழ்க்கையில் நீதியில் உம்மைத் தரிசிக்கும்பொழுது நான் உம்முடைய சாயலால் திருப்தியாவேன் என்று சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையில், நாம் தேவனை நோக்கிப் பார்க்கும்பொழுது அவருடைய சாயலுக்கு ஒப்பாக மாறுகிற மாற்றத்திற்குள்ளாக நாம் வரவில்லை என்றால் நாம் தேவனை நோக்கிப் பார்க்கின்ற காரியம்  சரியான நிலையில் காணப்படவில்லை என்றே அர்த்தமாயிருக்கிறது. ஆனால் அவரை நோக்கிப் பார்த்து அவருடைய சாயலுக்கு ஒப்பாக நாம் மாறுகிற வாழ்க்கை என்பது, நாம் தேவனுடைய நீதியைப் பிரதிபலிக்கிறவர்களாகவும் இந்த உலகத்தில் அவருடைய வெளிச்சத்தைக் காட்டுகிறவர்களாகவும் காணப்படுகிற மாற்றத்தைக் குறிக்கிறதாக இருக்கிறது. ஆகவே இந்த உலகத்தில் இயேசுவினால் பாதிக்கப்பட்ட எந்தவொரு மனிதனும் அவருடைய சாயலைத் தங்கள் வாழ்க்கையில் தரித்திருக்கிறவர்களாக மாத்திரமல்ல அவருடைய சாயலுக்கு ஒப்பாய் மற்றவர்களுக்கு முன்பாக அவருடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்கிறவர்களாக, அவரை வெளிப்படுத்துகிறவர்களாகக் காணப்படுகிறார்கள். அது நம்முடைய வாழ்க்கையில் மெய்யான திருப்தியைக் கொடுக்கும். இந்த உலகத்தில் வேறொன்றும் திருப்தியைக் கொடுக்காது என்பதை நாம் சரியாய் விளங்கிக்கொள்ள வேண்டும். ஒருவன் தேவனில் திருப்தியடையும்பொழுது மற்ற எதிலும் அவன் திருப்தியடைய முடியாது. ஒருவன் தேவனில் திருப்தியடையவில்லை என்றால் அவனுடைய வாழ்க்கையில் நிச்சயமாக வேறோன்றினாலும் அவன் திருப்தியடையவே முடியாது.