அக்டோபர் 10
“நான் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைக் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்” (மீகா 7:9)
மீகா தீர்க்கத்தரிசி தேவனுடைய இரக்கம், தேவனுடைய தண்டனை இரண்டையும் அதிகமாக இந்த புஸ்தகத்தில் எடுத்துச்சொல்லுகிறார். அநேகர் தேவனுடைய தண்டனை என்று அவர்களுடைய வாழ்க்கையில் அனுமதிக்கப்படும் சோர்ந்து போகிறார்கள், அல்லது தேவன் பேரில் கோபம்கொள்ளுகிறார்கள். காரணமில்லாமல் தேவன் நம்மைத் தண்டிக்கமாட்டார். தேவன் தம்முடைய மக்களைச் சீர்ப்படுத்தவே சிட்சிக்கிறார் என்றும், தேவனுடைய சிட்சையானது, நாம் அவருடைய பிள்ளையாக இருக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது என்றும் வேதம் சொல்லுகிறது. ஆகவே நாம் சோர்ந்து போக வேண்டிய அவசியமில்லை.
இவ்விதமான வேளைகளில், நாம் முரட்டாட்டமும் கலக குணமுள்ளவர்களாய் தேவனுக்கு எதிர்த்து நிற்பது, இன்னும் அதிகமாக நம்முடைய அமைதியைக் குலைக்கும். இன்னும் நம்முடைய பாவத்தைப் பெருகப்பண்ணுவோம். இன்னும் அதிகமாக நம்முடைய இருதயம் கடினப்படும். ஆனால் “என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்” என்று ஒப்புக்கொடுப்பது, நம்முடைய ஆவிக்குரிய அமைதியை இந்தவிதமான சூழ்நிலையிலும் காத்துக்கொள்ளும். நம்மில் இன்னும் அதிகம் பொறுமையை அடைய நமக்கு உதவி செய்யும். நாம் அவ்விதம் கடந்துபோகிறதை மற்றவர்கள் பார்க்கும்போது ஆண்டவருடைய நாமம் மகிமைப்படும்.
மேலும் இந்த ஒப்புக்கொடுத்தல் தண்டனைக்கு ஒப்புக்கொடுப்பதாக மாத்திரமல்ல, அது நம்பிக்கையோடு ஒப்புக்கொடுக்கிறதாய் இருக்கிறது. “அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப்பார்ப்பேன்.” உன்னுடைய காரியம் எவ்வளவு இருண்டதாக இருந்தாலும், உன்னை இரட்சித்த தேவன் அதை வெளிச்சமாக்குவார் என்பதில் சந்தேகம் கொள்ளாதே. அவருக்குக் காத்திருக்கிறவர்களை அவர் வெட்கமடையச் செய்யமாட்டார்.