“நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (ஆபகூக் 3:18).

 இன்றைக்குப் பொதுவாக நம்முடைய மகிழ்ச்சியை உலகத்தின் காரியங்கள் மூலமாகத் தேடப் பார்க்கிறோம். ஆனால் அது வெகு சீக்கிரத்தில் மறைந்து விடுகிறது. அதில் உண்மையான நிறைவு இருப்பதில்லை. ஆனால் ஆபகூக் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என்று சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். நம்முடைய மகிழ்ச்சி எப்பொழுதும் ஆண்டவருக்குள் இருக்க வேண்டும். மேலும் என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன் என்று சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். அருமையானவர்களே உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் இரட்சிக்கப்பட்ட உண்மையான உறுதியானது உண்டா? ஆண்டவர் உங்களுடைய பாவத்தை மன்னித்து மாத்திரமல்ல, உங்கள் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்ட அந்த விடுதலை உங்கள் வாழ்க்கையில் இருக்கின்றதா? அப்பொழுது மாத்திரமே இந்த இரட்சிப்பின் தேவனுக்குள் நாம் களிகூர முடியும். ஆபகூக் தன்னுடைய வாழ்க்கையில் இந்த உலகத்தின் நன்மைகள் இல்லாவிட்டாலும் தான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என்று சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். தேவனுக்குள் நாம் மகிழ்ச்சியாயிருக்கக் கற்றுக்கொள்ளும்பொழுது அந்த மகிழ்ச்சி நிலைத்திருக்கும். மேலும் 19 வசனத்தில் ‘ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.’ உண்மையாலுமே நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்குள்ளாக மகிழ்ச்சி கொண்டிருக்கும்பொழுது, கர்த்தர் நமக்காக இவைகளைச் செய்வார். அவருக்குள் நாம் திருப்தியாய் வாழக் கற்றுக்கொள்ளும்பொழுது கர்த்தர் நம்மை இவ்விதமாய் உயர்த்துவார். நம்முடைய ஆவிக்குரிய ஓட்டத்தை நாம் சந்தோஷத்தோடும் மகிழ்ச்சியோடும் ஓட அவர் நமக்கு உதவிச் செய்வார். உங்களுடைய ஆவிக்குரிய நிலையைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். தேவனோடு ஒப்புரவாகுங்கள். உங்களுடைய மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாய்க் காணப்படும்.