கிருபை சத்திய தின தியானம்

ஜனவரி 4                      திக்கற்றவர்களாக விடேன்         யோவான் 14:1-18

      ‘நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்,

உங்களிடத்தில் வருவேன்’ (யோவான் 14:18).

      சீஷர்கள் இழந்துபோன உணர்வுகளால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் எந்தவித ஆதரவும் இல்லாமல் காணப்பட்ட நிலையில், ஆண்டவராகிய இயேசு ‘நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்’ என்று சொன்னார். அருமையானவர்களே! ஒருவேளை உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள், பாடுகள், திக்கற்ற நிலை இருக்கும் வேளையில் சாத்தான், கர்த்தர்  உங்களை கைவிட்டுவிட்டார் என்று உங்களைத் தூண்டலாம். ஆனால் தேவன் சொல்லுகிறார் நான் உங்களைத் திக்கற்றவர்களாக விட்டு விடமாட்டேன் என்கிறார்.

    உன்னுடைய வாழ்க்கையை தேவன் திட்டமிட்டு, தெளிவான நோக்கங்களைக் கொண்டு வழிநடத்துகிறார் என்பதை மறந்துவிடாதே. தேவன் உன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொன்றிலும் ஒரு நோக்கத்தைக் கொண்டவராகவே செயல்படுகிறவராக இருக்கிறார். இன்னுமாக ஏசாயாவின் புத்தகத்தில் ‘ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்’(ஏசாயா 66:13) என்று சொல்லுகிறார். இந்த தேற்றரவாளனாகிய தேவன் தம்முடைய மக்களை தேற்றுக்கிறவராகவே இருக்கிறார். அவர் எவ்விதமாக தேற்றுகிறேன் என்று சொல்லுகிறார்? ஒரு தாய் தேற்றுவது போல நான் உங்களைத் தேற்றுவேன் என்று சொல்லுகிறார்.

       ஆகவே நம்முடைய வாழ்க்கையில் எல்லா விதமான அவநம்பிக்கையையும் விட்டுவிட்டு கர்த்தரைப் பற்றிக்கொள்ளுவோம். இன்னுமாக ஏசாயா 66:11 – ல் ‘நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்,’ கர்த்தர் நம்முடைய தேவனாக இருப்பதினால் மனமகிழ்ச்சி நமக்குரியது. சாத்தான் நம்மை மேற்கொள்ளாதபடிக்கு, அவனுக்கு எச்சரிக்கையாய் இருந்து எதிர்த்து நில்லுங்கள்.