அக்டோபர் 26                  

“நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்;  ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.”(சங்கீதம் 119 :141)

     விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்ளும் அநேகர் வெகு சீக்கிரத்தில் தங்கள் பக்தியை அலட்சியப்படுத்திவிடுகிறார்கள், தள்ளிவிடுகிறார்கள். அற்பமான ஒரு சிறிய கஷ்டம் வந்தாலும் அதை சகித்து, தேவன் பேரில் வைக்கும் விசுவாசத்தினால் அதை மேற்க்கொள்வதில்லை. ‘நான் தேவனைப் பின்பற்றி என்ன பிரயோஜனம்? தனக்குதானே இவ்விதமான கஷ்டங்கள். நான் இனிமேல் ஆலயத்திற்குபோகமாட்டேன். ஜெபிக்கமாட்டேன். வேதம் வாசிக்கமாட்டேன். தேவ பிள்ளைகளின் ஐக்கியம் எனக்கு வேண்டாம். நான் என் வழியைப் பார்த்துக் கொள்வேன்.’ என்று எப்படி சுலபமாக தேவனுடைய காரியங்களை அற்பமாய் பேசி; அசட்டை பண்ணிவிடுகிறார்கள்.

     சங்கீதக்காரன் இங்கு எவ்வளவு அழகாக சொல்லுகிறார் பாருங்கள். ‘ஆம், நான் சிறியவனாய் இருக்கிறேன்.’ மற்றவர்களுடைய பார்வையில் அற்பமாய் எண்ணப்படுகிறேன். என்னை யாரும் மதிப்பதில்லை. என்னைக் கிள்ளுக்கீரையாக எண்ணுவோர் பலர். அதோடு மாத்திரமல்ல நான் எல்லோராலும் அசட்டைப் பண்ணப்படுகிறேன். என்னை மற்றவர்கள் புறக்கணிக்கிறார்கள். என்னை யாரும் விரும்புவதில்லை.

     அருமையான சகோதரனே! சகோதரியே! நீ அவ்விதமான நிலையில் இருக்கிறாயா? சோர்ந்து போகாதே. தாவீதும் அவ்விதமான பாதையை கடந்து வந்தான். ஆனால் அவன் என்ன சொல்லுகிறான் பாருங்கள். ‘ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்’.  நீ அப்படி சொல். தேவன் ஏற்ற நேரத்தில் கைவிடாமல் உயர்த்துவார். அவர் மனிதர்களைப் போல் அல்ல. மறந்துவிடாதே. ‘ அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்: எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்’  (சங் 113:7) எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப் போலாக்குகிறார்.(சங் 107:41) இந்த வாக்குதத்தங்களைப் பற்றிக்கொண்டு உண்மையாய் ஜெபிப்பாயானால், தேவன் நிச்சயமாக உன் வாழ்வில் பெரிய காரியங்களைச் செய்வார்.