ஆகஸ்ட் 21
“நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது” (ஏசாயா 43:2)
ஒரு கிறிஸ்தவன் அவனுடைய மோட்சப் பிரயாணத்தில் அநேக எதிர்ப்புகளையும், போராட்டங்களையும், கடந்து செல்லவேண்டும். அவைகளைக் கடக்காமல் மோட்சப் பிரயாணம் இல்லை. ஜான் பனியன் எழுதிய ‘மோட்சப் பிரயாணம்’ புஸ்தகத்தில் கிறிஸ்தியான் எத்தனை விதமான சோதனைகளைச் சந்திக்கிறான் என்று வாசிக்கிறோம். ஆனால் அவைகளின் மத்தியில் தேவன் அவனை எவ்விதம் பாதுகாத்து கடைசியில் மோட்சத்தைச் சென்றடைகிறான் என்பதையும் வாசிக்கிறோம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இந்த ‘மோட்சப் பிரயாணம்’ என்ற புஸ்தகத்தை வாசிக்கவேண்டும். ஸ்பர்ஜன் என்ற தேவ மனிதர் இந்த புஸ்தகத்தை ஏறக்குறைய 100 முறைகள் வாசித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த வசனத்தில் தண்ணீர் வழியாக கடந்துச்செல்வதைக் குறித்துச்சொல்லப்படுகிறது. ஆறுகள் உன்மேல் புரளுவதில்லை என்று சொல்லப்படுவதால், இது கால் அளவு தண்ணீர் அல்ல, திரளான தண்ணீர். ஒரு ஆளையே மூழ்கடிக்கும் தண்ணீர். மேலும் அந்த தண்ணீரின் ஓட்டம் அமைதியானதாகவும் இல்லாதைக் குறிக்கிறது. இவ்விதமாக புரண்டோடும் தண்ணீரிலும் பிரயாணம் செய்யும் வேளைகளும் நமக்கிருக்கலாம். ஆனால் அவைகள் உன்மேல் புரளுவதில்லை. அவைகள் உன்மேல் புரண்டு அவைகளினால் மூழ்கடிக்கப்படமாட்டாய் என்று சொல்லுகிறார்.
மேலும் நீ அக்கினி போன்ற சோதனைகளிலும் கடந்து செல்லவேண்டியிருக்கும். அக்கினிப்பாதை என்பது மிகவும் கடுமையான சோதனைகளைக் குறிக்கிறது. தேவனுடைய பிள்ளைகள் அக்கினியால் எரிந்துபோகமாட்டார்கள். ‘அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது‘ அதன் மத்தியிலும் வெற்றியோடு கடந்து செல்ல தேவன் உன்னோடு கூட இருப்பார். இந்த வாக்குத்தத்தத்தை உனக்குரியதாக்கிக் கொள்வாயா?