கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 5                  நான் உன்னில் மகிமைப்படுவேன்          ஏசாயா 49:1-11

” அவர் என்னை நோக்கி: நீ என் தாசன்;

இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்” (ஏசாயா 49:3).

      அற்பமான நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தர், நான் உன்னில் மிகிமைப்படுவேன் என்று சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையானது கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கும் பொழுது அவருடைய கரத்தினால் நாம் ஒவ்வொரு நாளும் நாம் வனையப்படும் பொழுது அவருடைய சாயலில் நாம் உருவாகும் பொழுது கர்த்தர் நம்மூலமாக மகிமைப்படுவார். தேவனை அறியாத ஜனங்கள் மத்தியில் தான் ஜீவனுள்ள தேவன் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் படியாக நம்மூலம் அவர்களுக்கு தம்மை வெளிப்படுத்துவேன் என்கிறார்.

     ஒரு பாவியின் வாழ்க்கை தேவனை மகிமைப்படுத்துகிறது என்பதை, அவருடைய உன்னதமான கிரியை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இன்னுமாக வேதம் சொல்லுகிறது “வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்” (ஏசாயா 44:23). நம்முடைய வாழ்க்கையை பாவத்தின் ஆளுகையிலிருந்து மீட்டு தம்முடைய பிள்ளைகளாக மாற்றி நம்முடைய வாழ்க்கையின் மூலமாக மிகிமைப்படுகிறார்.

   நம்முடைய வாழ்க்கையின் மூலம் எதினால் மகிமைப்படுவார்? யோவான் 15:8 -ல் ” நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்” என்று இயேசு சொல்லுகிறார். தேவனுக்கென்று நாம் ஆவிக்குரிய கனிகளைக் கொடுக்கும்பொழுது ஆவியானவரின் கனிகளை நம்முடைய வாழ்க்கையின் மூலமாக வெளிப்படும் பொழுது கர்த்தர் நம்முடைய வாழ்க்கையின் மூலம் மகிமைப்படுகிறார். நம்மை காண்கிற ஜனங்கள் தேவனுடைய சாயலை நம்மில் காணும்பொழுது கர்த்தர் மகிமைப்படுகிறார். உன்னுடைய வாழ்க்கையின் மூலம் தேவன் மகிமைப்படுகிறாரா? அல்லது தூஷிக்கப்படுகிறாரா? சிலுவையைப் பற்றிக்கொள்.