“பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்” (1கொரிந்தியர் 9:22).

நம்முடைய வாழ்க்கையில் நாம் எந்தளவுக்கு ஆத்தும பாரம் உள்ளவர்களாய் இருக்கிறோம் என்பதை நாம் விளங்கிக்கொள்வது அவசியம். ஆத்தும பாரம் என்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் ஊழியருக்கும் இருக்க வேண்டிய மிக முக்கியமான காரியமாய் இருக்கின்றது. பவுல் தன்னுடைய ஊழியத்தில் அதிக ஆத்தும பாரம் உள்ளவராய் காணப்பட்டார். நம்முடைய வாழ்க்கையில் ஆத்தும பாரம் இல்லாமல் வாழுவது நிச்சயமாகப் பாவமாகவே இருக்கிறது. பவுல் எவ்விதமாய் ஆத்துமபாரம் கொண்டவராய் இருந்தார் என்பதைப் பார்க்கும்பொழுது, “எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது; நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது. மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே” (ரோமர் 9:1-3). பவுலின் இந்த ஆத்தும பாரத்தைப் பார்க்கும்பொழுது மிகுந்த ஆச்சரியமாக இருக்கின்றது. பவுல் தன்னுடைய ஊழியத்தின் பாதைகளில் மிகுந்த பாடுகளைக் கடந்துசென்றார். அருமையானவர்களே! நம்முடைய வாழ்க்கையில் நாம் ஆத்தும பாரத்தை எந்தளவு கொண்டிருக்கிறோம் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆத்தும பாரம் இல்லாமல் வாழுகின்ற வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல. அழிந்துபோகிற ஆத்துமாக்களைக் குறித்த உண்மையான உணர்வு நமக்குள் இருக்கின்றதா? ஆண்டவருடைய சத்தியத்தை வெறும் மனதளவில் அறிந்து வாழுகிறோமா அல்லது இந்த சத்தியத்தினால் நாம் பாதிக்கப்பட்டு அதின் அடிப்படையில் நாம் வாழுகின்றோமா? நாம் அநேக வேளைகளில் சத்தியத்தின்படி வாழாமல் இருப்பதினால் கிறிஸ்தவத்திற்கு நாமே ஒரு தடையாக இருக்கின்றோம். அதை நாம் விளங்கிகொள்ளும்பொழுது மாத்திரமே மெய்யான தேவனுடைய சத்தியத்தை நம் நடைமுறை வாழ்க்கையில் வெளிப்படுத்தக்கூடிய மக்களாய்க் காணப்பட முடியும்.