“அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” (யோவான் 3:30).

யோவான் ஸ்நானகனின் வாஞ்சையும் விருப்பமும் எவ்வளவு ஆச்சரியமுள்ளதாக இருக்கிறது! அருமையானவர்களே, தேவன் நம்முடைய வாழ்க்கையில் உயர்த்தப்படுவதே நம் வாஞ்சையாக இருக்க வேண்டும். அவ்விதமான வாஞ்சையைக் கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். நாம் நம்முடைய வாழ்க்கையில் நம்மைத் தாழ்த்தாமல் தேவன் நம்மில் பெருகுகிறவராய் பார்க்க முடியாது. நம்மை எந்தளவுக்கு தாழ்த்துகின்றோமோ அந்தளவுக்கு அவருடைய நாமம் மேன்மையாய் உயர்வாய்க் காணப்படும். அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் தான் பெருக வேண்டும் என்று பார்க்கின்றார்கள். ஆனால் தேவன் அவர்களுடைய வாழ்க்கையில் மறைக்கப்பட்டு போகிறார். இன்றைக்கு மனிதர்கள் தங்களை மேன்மைப் படுத்தி வாழ விரும்புகிறதை நாம் பார்க்கிறோம். ஆனால் மெய்யான ஆவிக்குரிய திருப்தி எதில் கிடைக்கும்? தேவன் என்னுடைய வாழ்க்கையின் மூலமாக மகிமைப்பட வேண்டும். தேவனுடைய சத்தியம் வெளிப்பட வேண்டும். நானும் அவரால் உபயோகப்படுத்தக்கூடிய ஒரு கருவியாகக் காணப்பட வேண்டும். தேவனுக்கே மகிமை செலுத்தப்பட வேண்டும் என்பதே நம்முடைய விருப்பமும் வாஞ்சையுமாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் இவ்விதமாக ஜெபிப்பது நம் அனுதின ஜெபமாக இருக்கட்டும். “ஆண்டவரே நீர் என்னுடைய வாழ்க்கையில் பெருகியருளும், நான் சிறுகட்டும்” என்று ஜெபிப்போம். நம்முடைய வாழ்க்கை இந்த மகத்துவமான தேவனை உயர்த்துகிறதாய் இருக்குமானால் அது எவ்வளவு ஆசீர்வாதமாக இருக்கும்!