“நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய  வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன்” (ஓசியா 13:5)

       மெய்யாகவே ஒரு பாவி வறண்டுபோன வறட்சியான தேசத்தில் அலைந்து திரிகிறவனாகவே காணப்படுகிறான். அந்த விதமான சூழலில் கர்த்தர் தாமே நம்மை தேடிவந்த இரட்சகராக நம்மை அழைத்து தெரிந்து கொண்டார். அவர் நம்மை தெரிந்து அழைக்காமல் இருந்திருப்பாரானால் இன்னும் வறண்டு போய், மறைந்திருப்போம் என்பதை நினைவில் கொள். ஆனால் தேவன் நம்மேல் இரக்கமுள்ளவராக நம்மை தெரிந்துகொண்டார். மேலும் “பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்” (உபா 32:10) என்று சொல்லப்படுகிறது.
       மெய்யாலுமே ஒரு பாவியின் வாழ்க்கை வெறுமையானதாகவே இருக்கிறது. கிறிஸ்து இல்லாத வாழ்க்கை நம்பிக்கையற்றதும், எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமற்றதுமாகவே இருக்கிறது. அந்த சூழ்நிலையில் கர்த்தர் ஒரு மனிதனை தெரிந்துகொண்டு அவனுடைய பாவங்களை உணர்த்தி, அவனை நடத்துகிறதும், உணர்த்துகிறதும், கண்மணியைப் போல பாதுகாக்கிறதுமாக செயல்படுகிறார் என்றால் தேவனுடைய கிருபைகளுக்கு அளவில்லை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
     ஆகவே நாம் சங்கீதக்காரனைப் போல “நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” (சங் 63:1) என்று சொன்ன வண்ணமாக கர்த்தரை தேடுவோம். வாழ்க்கையில் காரியங்கள் ஒருவேளை கசப்பாக காணப்பட்டாலும், வறண்டதும் விடாய்த்ததும், தண்ணீரற்றதுமான நிலத்திலே நாம் கடந்து போகும்படியான சூழ்நிலை ஏற்பட்டாலும் தேவனை வாஞ்சிக்கும் பொழுதும், நாம் மெய்யான திருப்தி அடைவோம் என்பதைக் கண்டுகொள்ளலாம்.