கிருபை சத்திய தின தியானம்
ஜூலை 22 உன்னைத் தெரிந்துக்கொண்டேன் ஏசாயா 48 : 1—10
“இதோ உன்னை புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியை போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்து கொண்டேன் ஏசாயா”(48 :10)
அநேக தேவபிள்ளைகள் சொல்லும் சாட்சி என்ன? என் வாழ்க்கையில் சந்தித்த இந்த ஏமாற்றம், தோல்வி, வேதனை, வியாதி, நஷ்டம், இழப்பு இவைகளினால் தேவனைத் தேடவேண்டுமென்ற வாஞ்சை என்னில் எழும்பிற்று. இவைகள் என்னுடைய வாழ்க்கையில் வராதிருந்திருக்குமானால், நான் தேவனை கண்டு கொண்டிருக்கமாட்டேன். அருமையானவர்களே! ஒருவேளை உங்களுடைய சாட்சியும் இவ்விதமானதாகவே இருக்கலாம். ஏறக்குறைய அநேகரின் சாட்சி இவ்விதமாகவே இருக்கிறது. ஆகவேதான் தேவன் உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துக்கொண்டேன் என்று சொல்லுகிறார்.
விசுவாசிகளை தேவன் சுத்திகரிக்கும்பொழுது பாடுகளை, உபத்திரவங்களை அவர்களுடைய வாழ்க்கையில் அனுப்புகிறார். அவர்களை பரிசுத்தம்படுத்தும்படியாக இவ்விதம் அவைகளை அவர்களுக்கு அனுமதிக்கிறார். யோபு, ‘அவர் என்னை சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்‘ (யோபு 23 : 10) என்று சொல்லுகிறார். அவர் சோதனையில் நான் அழிந்துபோவேன் என்று சொல்லவில்லை. ஆண்டவரே நீர் சோதித்து என்னை ஏன் உபத்திரவபடுத்துகிறீர் என்றும் சொல்லவில்லை. ‘சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்’ என்று நம்பிக்கையோடு சொல்வதைப்பாருங்கள். உன்னுடைய சோதனை வேளையில் நீ அவ்விதம் சொல்லக்கூடுமா?
தேவன் நம்மை மேலான நோக்கத்திற்கென்றே புடமிடுகிறார். (மல்கியா 3 : 3) லேவியின் புத்திரரை சுத்திகரிக்கிறேன் என்று சொல்லுகிறார். எதற்காக அவ்விதம் செய்கிறேன் என்று சொல்லுகிறார். ‘அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கை செலுத்தும்படிக்கும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. நீ உன்னுடைய வாழ்க்கையில் சோதனையின் வழியில் கடந்து போய்க்கொண்டிருப்பாயானால், சோர்ந்து போகாதே. யோபுவை போல சோதித்தபின் பொன்னாக விளங்குவேன் என்று சொல். தேவன் அப்படியே செய்வார்.