செப்டம்பர் 18
“நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்” (யோவான் 14:18)
அநேக சமயங்களில் நம் வாழ்க்கையில் மனித உதவிக்கும் அப்பாற்பட்ட நிலையில் நம்முடைய சூழ்நிலைகள் காணப்பட்டலாம். எல்லா விதங்களிலும் கைவிடப்பட்ட அல்லது அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் நாம் இருக்கலாம். ஆனால் வேதம் சொல்லுகிறது, தேவன் தம்முடைய பிள்ளைகளை திக்கற்றவர்களாக விடார். தேவன் வாக்குப்பண்ணின இந்த வாக்குத்தத்தத்தை நாம் எப்பொழுதும் சார்ந்து கொள்ளலாம். ஆகவேதான் தாவீது இராஜா தன் சங்கீதத்தில், ” நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” (சங் 23:4) என்று சொல்லுகிறார்.
தாவீது கடந்துபோன சூழ்நிலைகள் சாதாரணமானது அல்ல, அது மரண இருளின் பள்ளத்தாக்கு. அந்த சூழ்நிலையில் அவர் எப்படி பொல்லாப்புக்கு பயப்படேன் என்று சொல்லுகிறார்? தேவன் தன்னோடு கூட இருக்கிறார் என்றும், இந்த சூழ்நிலையிலும் என்னை வழிநடத்த வல்லவர் என்பதையும் அறிந்திருந்தார். நம் வாழ்க்கையில் தேவன் நம்மோடுகூட இருக்கிறார் என்ற நிச்சயம் எப்பொழுது வரும்? நாம் தேவனுடைய பிள்ளைகளாக தேவனோடு ஒப்புரவு கொண்டவர்களாக, கர்த்தர் என் பாவங்களை மன்னித்திருக்கிறார் என்ற நிச்சயத்தின் மூலமாக மாத்திரமே முடியும். இப்படி இருக்கும்பொழுது மாத்திரமே, எவ்வித சூழ்நிலையிலும் அவர் நம்மோடு இருக்கிறார் என்ற நிச்சயம் நம்மில் காணப்படும்.
“இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்” (ஏசாயா 43:1) என்று தேவன் சொல்லுகிறார். தேவன் தம்முடைய மக்களை அறிந்திருக்கிறார். அவர்களின் எல்லாவித சூழ்நிலையையும் அறிவார். அதினால் அவர்களின் பட்சத்தில் இருந்து செயல்படுகிறவராக இருக்கிறார். ஆகவே எந்தவித சூழ்நிலையிலும் அவர் நமக்கு உதவி செய்வார் என்ற விசுவாசத்தோடே அவரை நம்பி அமைதியாக ஓட முடியும்.