“யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை” (ஏசாயா 44:21).

நம்முடைய வாழ்க்கையில் அநேக வேளைகளில் நாம் தேவனால் மறக்கப்பட்டுவிடோமோ என்பதான உணர்வுக்குள்ளாகக் கடந்து செல்கிறோம். நம்முடைய போராட்டங்கள் நெருக்கமான சூழ்நிலைகளில் நாம் மாறக்கப்பட்டுப் போனவர்களைப் போல தடுமாறுகிறோம். அவ்வாறு எண்ணி நம்பிக்கையை இழந்துவிடுகிறோம். தேவன் நம்மை ஒரு நோக்கமில்லாமல் உருவாக்குகிறவர் அல்ல. தெளிவான நோக்கமும் திட்டத்தையும் வைத்திருக்கின்றார். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகிற ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கும் ஒரு நோக்கமுண்டு. ஆகவே இவ்விதமான சூழ்நிலையில், தேவன் என்னை மறந்துவிட்டார் என்று எண்ணாமல், தேவன் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றுமபடியாக நம்மை அவர் தொடர்ந்து நினைவுகூர்ந்து நம்முடைய வாழ்க்கையில் செயல்படுகிறார் என்பதை நினைத்துக்கொள்வோம். சாத்தான் அநேக வேளைகளில் நாம் தேவனால் கைவிடபட்டுவிட்டோம் என்று எண்ணும்படியாக நம்மை பயமுறுத்தக்கூடும். ஆனால் தேவன் சொல்லுகிறார், நான் உன்னை மறப்பதில்லை என்று. தேவன் பொய் சொல்லுகிறவர் அல்ல. அவர் உண்மையுள்ளவர். அவருடைய அன்பிற்கும் இரக்கத்திற்கும் முடிவில்லை. ஆகவே தேவனை நாம் நோக்கிப் பார்ப்போம். அவருடைய இரக்கத்தை நாம் சார்ந்துகொள்வோம்.  நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் அவர் நம்மைக் கைவிடாமல் ஒரு நோக்கத்தோடு நம்மில் செயல்படுகிறார். தேவனிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் தைரியமுள்ளவர்களாய் அவருடைய கிருபையைச் சார்ந்துகொள்வோம்.