“கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்து, ஜூவாலை வெளியின் விருட்சங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது” (யோவேல் 1:19).

நம்முடைய வாழ்க்கையில் நாம் தேவனை நோக்கிக் கூப்பிடுகிறவர்களாக இருப்பது எவ்வளவு அவசியம்! ஒரு கடுமையான சூழ்நிலையில் யோவேல் தீர்க்கதரிசி தேவனை நோக்கிக் கூப்பிடுகிறார். நம்முடைய வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் தேவனை நோக்கிக் கூப்பிடுவது அவசியம். கடுமையான சூழ்நிலைகளில் நாம் சோர்ந்து போகிறவர்களாகக் காணப்படுகிறோமா? அந்த சமயத்தில் நாம் என்ன செய்வது என்பதை அறியாதவர்களாய் திகைத்து நிற்கிறோமா? ஆனால் அவ்விதமான வேளையிலும் நாம் தேவனை நோக்கிக் கூப்பிட வேண்டியது அவசியமாயிருக்கிறது. நம்முடைய இரட்சிப்பு சமீபமாயிருக்கிறது. ஏனென்றால் நம்மை இரட்சிக்கிறவர் தேவனே. அநேகர் எல்லாம் நன்றாக இருக்கும்பொழுது சந்தோஷமாயிருப்பார்கள். ஆனால் சூழ்நிலைகள் மாறும்பொழுது ஜெபிப்பதையும் விட்டுச் சோர்ந்துபோகிறவர்களாய்க் காணப்படுவார்கள். அருமையானவர்களே நாம் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோம். அதிகமான நெருக்கமான சூழ்நிலைகள் காணப்பட்டால் நாம் இன்னும் அதிகமான ஊக்கத்தோடே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோம். நமக்குப் பதிலளிக்கும் தேவன் உண்டு என்பதை அறிந்து கொள்வோம்.