கிருபை சத்திய தின தியானம்

ஜூலை25         ஒன்றை நான் கேட்டேன்      சங்கீதம் 27: -14

“கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையை பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” (சங்கீதம் 27:4)

 நாம் நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய வாஞ்சையுள்ளவர்களாய் இருக்கவேண்டும். சங்கீதகாரன் தன்னில் ஒரு குறிக்கோளோடு வாஞ்சிக்கிற வாஞ்சையை பார்க்கிறோம். நாம் உலகத்திற்குரிய அநேக வாஞ்சைகளையும் குறிக்கோள்களையும் கொண்டிருப்பவர்கள்.  ஒரு சிலர் தேவனுடைய செய்திகளை கேட்கிறவேளையிலோ அல்லது ஏதோ ஒரு சில வேளைகளில் மாத்திரம் அவ்விதமான ஆவிக்குறிய வாஞ்சையைக் கொண்டிருப்பார்கள். ஆனால் எவ்வளவு சீக்கிரத்தில் அவைகளை மறைந்துவிடுகின்றன! அநேக சமயங்களில் உங்களின் ஆவிக்குரிய வாஞ்சைகள் அவ்விதமாகவே காணப்படுகிறது. ஆனால் சங்கீதகாரன், அதை வாஞ்சித்தது மாத்திரமல்ல. அது தனக்கு கிடைக்குமட்டும் அதையே நாடிச் செல்வேன் என்று சொல்லுகிறார்.

   இரண்டு காரியங்களை அவர் வாஞ்சிக்கிறார். முதலாவது தேவனுடைய மகிமையைப் பார்க்கவேண்டும். அதாவது அவனுடைய வாழ்க்கையில் அவர் நாமம் மகிமைப்படவேண்டும். இரண்டாவது தேவனுடைய பிரசன்னம் வெளிப்படுபடி தேவனுடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யவும் வாஞ்சித்தார். தேவனுடைய மகத்துவத்தையும், வல்லமையையும், கிருபையையும், அவர் உன்னதத் தன்மையையும், அவருடைய நாமத்தைக்குறித்தும் இன்னும் அநேக குணநலன்களையும், வாக்குத்தத்தங்களையும், உடன்படிக்கைகளையும் ஆராய்ச்சி செய்யும்படியாக வாஞ்சித்தார். ‘நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்’ (மத் 5:6) மேலான ஆவிக்குரிய வாஞ்சையை பெற்றவர்களாக இருங்கள். தேவன் உங்களைத் திருப்தியடையச்செய்வார்.