கிருபை சத்திய தின தியானம்

அக்டோபர் 18            நான் உங்கள் தேவன்            எசே 14:22–31

“என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்;

நான் உங்கள் தேவன் என்று

கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்.” (எசே 34:31)

            எசேக்கியேல் தீர்க்கதரிசி பாபிலோன் தேசத்தில் நேபுகாத்நேச்சாரின் நாட்களில் சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் மக்களுக்கு  அனுப்பட்ட தீர்க்கதரிசியாய் இருந்தார். அந்த தேசத்தில் அந்நாட்களில் வாழ்ந்து வந்த வேளைகளில், அந்த ஜனங்கள் தேவன் மேல் இருக்கும் விசுவாசத்தை விட்டுவிடாமல் இருக்கவும், எந்த மக்கள் மத்தியில் வாழ்ந்து வந்தார்களோ அந்த மக்களின் பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்ளாதிருக்கவும், எச்சரித்து தேவ செய்தியை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

            இவர்கள் தங்கள் சொந்த தேசத்தை விட்டு அந்நிய தேசத்தில் ஒரு புறஜாதி ராஜாவின் கீழ் அடிமைகளைப்போல வாழவேண்டியதாயிருந்ததினால் தேவன் தங்களை மறந்தாரோ! இனிமேலும் தேவன் தங்களுக்கு உதவி செய்வாரோ! என்று எண்ணி கலங்கிக் கொண்டிருந்திருப்பார்கள் . இவ்விதமான காலக்கட்டத்தில்தான் இந்த செய்தி தீர்க்கன் மூலமாக அனுப்பபட்டது. ‘என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகள் நீங்கள், நான் உங்கள் தேவன்.’

            தேவன் ஒருகாலும் தன்னுடைய ஜனங்களை முற்றிலும் கைவிட்டதில்லை. இரட்சிக்கப்பட்டவர்கள் தங்கள் இரட்சிப்பை இழந்துவிடுவார்கள் என்று வேதம் போதிப்பதில்லை. ஏனென்றால் தேவனே அவர்களை இரட்சித்து தொடர்ந்து பாதுகாக்கிறவர். வழிநடத்துகிறவர். ஆனால் ஒன்று, தேவன் தம்முடைய மக்கள் தவறிப்போகும்பொழுது அவர்களை சிட்சித்து தம்பக்கமாக திருப்புகிறவர். அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து தேவன் பக்கம் திரும்ப வழிநடத்தப்படுகிறார்கள். தேவன் தம்முடைய மக்களை அநாதி சிநேகத்தால் சிநேகிக்கிறார்.

            அவர் உன் தேவன் என்று உரிமைப் பாராட்டி அவரிடத்தில் வரலாம். அவ்விதம் நீ வருவதை தேவன் எதிர்பார்க்கிறார் ‘தங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் தங்களோடே இருக்கிறதையும் நீங்கள் என் ஜனமாயிருக்கிறதையும் அவர்கள் அறிந்துக்கொள்வார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.’