“தங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் தங்களோடே இருக்கிறதையும், இஸ்ரவேல் வம்சத்தாராகிய தாங்கள் என் ஜனமாயிருக்கிறதையும், அவர்கள் அறிந்துகொள்வார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எசேக்கியல் 34:30).

நம்முடைய வாழ்க்கையில் இந்த இரண்டு காரியங்களும் மிக முக்கியமானவைகள். நம்முடைய தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வும், நாம் அவருடைய ஜனம் என்று அறிகிற அறிவும் நம்முடைய வாழ்க்கையில் இருக்குமானால், நம்முடைய வாழ்க்கையின் செயல்களும் சிந்தனைகளும் நிச்சயமாக மாறியிருக்கும். நாம் அநேக வேளைகளில் இவ்விதமானக் காரியத்தை உணராமல் நம்முடைய வாழ்க்கையில் பயப்படுகிறவர்களாகவும், அவிசுவாசம் கொண்டு செயல்படுகிறவர்களாகவும் காணப்படுகிறோம். ஆனால் வானத்தையும் பூமியையும் படைத்த தேவன் என்னோடுக் கூட இருக்கிறார், அவர் என்னோடுக் கூட இருக்கிறார் என்று அறிந்து கொள்ளுதல் நமக்கு எவ்வளவு நம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கிறதாய் இருக்கிறது! மேலும் 31ஆம் வசனத்தில் “என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்; நான் உங்கள் தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.” ஆம், நாம் அவருடைய மந்தையும், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள். தேவனுடைய மந்தையில் நான் இருக்கிறேன் என்றால் அது எவ்வளவுப் பெரிய ஆண்டவருடைய கிருபை! ஒருகாலத்தில் சாத்தானின் மந்தையில் இருந்தேன். அவன் என்னை அழிவுக்கு வழிநடத்தினான். கர்த்தர் தம்முடைய பெரிதானக் கிருபையினால் என்னை அவர் பக்கமாகத் திருப்பினார். இப்பொழுது நான் அவருடைய மந்தையில் இருக்கிறேன். அருமையானவர்களே! அவருக்குப் பிரியமாய் வாழுகிற வாழ்க்கையையே நாம் வாஞ்சிப்போம். அதற்குப் புறம்பானதை நாம் விட்டு விலகுவோம். தேவனே நான் உம்முடைய ஜனம் என்று அறிந்து கொண்டு வாழுகிற வாழ்க்கையை எனக்குத் தாரும் என்று அவரிடத்தில் ஜெபிப்போம்.