மார்ச் 2
“கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (நியாயா 6:12).
அன்பானவர்களே! கர்த்தர் உங்களோடு இருக்கும் பொழுது நீங்களும் பராக்கிரமசாலிகளே. அதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். மிதியானியர்கள் கையில் அடிமைகளாக அடிமைப்பட்டு வாழ்ந்த இந்த மக்களுக்கு தப்பிக்க கூடிய ஒரு பராக்கிரமசாலியை கர்த்தர் எழுப்புகிறார். அவன் கிதியோன். தேவன் தம்முடைய மக்களை விடுவிக்கும் படியான பணியில் கருவிகளாக இருக்கக்கூடிய கிதியோன்கள் இன்றைக்குத் தேவை. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு கிதியோனாக இருக்க விரும்புகிறீர்களா? ஒருவேளை நீங்கள் சொல்லலாம் என்னால் முடியாது என்று. ஆனால் ஆண்டவர் “அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்” (நியாயா 6:14) என்று சொல்லுகிறார்.
உங்களுக்கு இருக்கும் பலம் உங்களால் ஆனதல்ல. அது கர்த்தரால் உண்டானது. இன்றைக்கு உங்களுக்கு என்ன பலம் இருக்கிறதோ அந்த பலத்தோடே சுவிசேஷத்தை அறிவியுங்கள். தேவன் உங்கள் அருகில் இருப்பேன் என்கிற உறுதியான வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார். ‘நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்’ என்று சொல்லுகிறார். விடுதலை என்பதை கர்த்தர் வாக்கு பண்ணியிருக்கிறார். அதை அவர் நிறைவேற்றுவார். ஏனென்று கேட்டால் ‘உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா’ என்கிறார். நம்மை அனுப்புகிறவர் மனிதன் அல்ல. நம்மை அனுப்புகிறவர் சர்வவல்லமையுள்ள தேவன். ஆகவே கர்த்தருடைய அழைப்புக்கும், அவருடைய வழிநடத்துதலுக்கும் நம்மை ஒப்புக்கொடுப்போம். தேவனுடைய கரத்தில் நம் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கும் பொழுது, நம்மைக் கொண்டு தேவன் பெரிய காரியங்களைச் செய்வார்.