“ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க;என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்” (நெகேமியா 2:3).

நெகேமியா தன்னுடைய ஜனங்களின் பாரங்களைப் பகிர்ந்து கொள்ளுகிறதைப் பார்க்கிறோம். அவனுடைய மக்கள் படும் வேதனையைக் கேட்டபொழுது அவன் துக்கமுகமானான். “அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகாத் தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க்கிடக்கிறது என்றார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி” (நெகேமியா 1:3-4). ஆண்டவருடைய ஊழியங்கள் இன்றைக்கு எந்தளவுக்கு பின்தங்கிப் போயிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கும்பொழுது, தேவனை அறிந்த ஒரு மனிதன் நிச்சயமாக பாரத்தோடு இல்லாமல் இருக்க முடியுமா? கர்த்தருடைய ஊழியத்தைக் குறித்தப் பாரம் எப்பொழுதும் நம்மில் இருப்பது அவசியம். இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் மனிதன் சத்தியத்தைக் கேட்பது அரிதாயிருக்கிறது. பல தவறான உபதேசங்களும் காணப்படுகிறது. ஆனால் நான் எவ்விதமாக வாழுகிறேன்? நெகேமியா ராஜாவுக்கு பானபாத்திரகாரனாய் இருந்தான். ராஜ அரண்மனையில் சகல வசதிகளோடு இருக்கும் வாய்ப்பு அவனுக்கு இருந்தது. ஆனால் அவனுடைய உள்ளத்தில் இருந்த பாரத்தைப் பாருங்கள். நெகேமியா நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியை வைத்திருக்கிறான். நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவருடைய காரியத்தைக் குறித்து நெகேமியாவைப் போல பாரத்தோடு செயல்படுவது எவ்வளவு பெரிய தேவை அல்லவா?