“நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன். நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்” (சங்கீதம் 52:8-9).

என்ன ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட அருமையான வாழ்க்கையைக் குறித்து இங்குச் சொல்லப்பட்டிருக்கிறது! ஒலிவமரம் தேவனுடைய ஆசீர்வாதத்தைக் குறிக்கிற ஒன்றாக இருக்கிறது என்பதை நாம் வேதத்தில் பார்க்கிறோம். ஆம் நம்முடைய வாழ்க்கையில் பெற்றிருக்கின்ற எந்தவொரு ஆசீர்வாதமான வாழ்க்கையும் தேவனுடைய செயலாகவே இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நம்முடைய ஞானத்தினாலோ பலத்தினாலோ அல்ல, ஆண்டவருடைய கிருபையினால் மாத்திரமே. ஆகவேதான் தாவீது சொல்லுகிறான். தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன் என்று. நம்முடைய வாழ்க்கையில் எந்தக் காலத்திலும் நம்பிச் சார்ந்து வாழுகிற ஒரு காரியம் தேவனுடைய கிருபை. நாம் முற்றிலுமாகத் தகுதியற்றவர்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆண்டவருடைய பரத்தின் ஒத்தாசை நமக்குத் தேவை. ஆகவே கிருபையை நாம் சார்ந்துக் கொண்டு வாழும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் தேவன் அழகாக இந்தக் காரியத்தைச் செய்கிறார். உமது நாமத்திற்கு காத்திருப்பேன் என்று சொல்லுகிறான். நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்காகக் காத்திருக்கும்போது நிச்சயமாக அருமையான வாழ்க்கையை நமக்குக் கொடுப்பார். தங்களுடைய வாழ்க்கையில் தானாகவே தங்களை உயர்த்திக்கொள்ளும்படியாக அல்ல. தேவன் ஏற்றக் காலத்தில் தம்முடைய ஆசீர்வாதத்தைக் கட்டளையிடும்படியாகவும் அவருக்காகக் காத்திருக்கிற ஒரு அருமையான காரியம் இது. தேவனை முழுவதுமாகச் சார்ந்து வாழுகிற ஒரு அருமையான வாழ்க்கையின் ஆசீர்வாதத்தைக் குறித்து தாவீது இங்கு சொல்லுகிறான்.