“நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ” (மத்தேயு 18:33).

ஒரு மனிதன் அதிகமான கடனை உடையவனாய் இருந்தான். ஆனால் அந்தக் கடனை ஆண்டவர் அவனுக்கு மன்னிக்கிறார். எவ்வளவுப் பெரிய ஒரு கடனை ஆண்டவர் அவனுக்கு மன்னித்திருக்கிற வேளையில், அவன் தன் சக ஊழியக்காரனிடத்தில் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும்பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது. 28 ஆம் வசனத்தில் அதைக் குறித்து நாம் பார்க்கிறோம். நம்முடைய எத்தனையோ பாவங்களை அவர் மன்னிதிருக்கிறார். ஆனால் நாம் மற்றவர்களை மன்னிப்பதில் எவ்வளவு சிரமப்படுகிறோம். நமக்கு எதிராய் செய்தவர்களின் காரியத்தை மன்னிக்கவும் முடிவதில்லை மறக்கவும் முடிவதில்லை. நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவர் நம்மை எவ்வளவாய் மன்னித்திருக்கிறார் என்று எண்ணிப்பார்த்து நாமும் மற்றவர்களை மன்னிப்பது அவசியம். அநேக வேளைகளில் நம்முடைய இருதயத்தின் கடினத்தின் நிமித்தமாக ஆண்டவர் நம்மை மன்னிக்காமல் தண்டனையைக் கொடுக்கிறார். மற்றவர்களை நாம் மன்னிக்காததினால் தேவன் நம் பாவங்களை மன்னிக்காதது மாத்திரமல்ல, தண்டனையையும் வழங்குகிறார். இந்தக் காரியத்தை நாம் விளங்கிக்கொள்ளுவோம். மற்றவர்களை மன்னிக்கிற சுபாவத்தைத் தாரும் என்று ஆண்டவரிடத்தில் கேட்ப்போம். இயேசு கிறிஸ்து தம்மைச் சிலுவையில் அறைந்த மக்களையும் பார்த்து “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று சொன்னார். இயேசு கிறிஸ்துவைப் போல மன்னிக்கும் சிந்தை நம்மில் காணப்படட்டும். அப்பொழுது அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்கு சேமத்தைக் கொடுப்பார்.