“என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்” (எரேமியா 46:28).

தேவன் தாமே இந்த இடத்தில் தம்முடைய மக்களைப் பார்த்துச் சொல்லியிருக்கிற அருமையான வாக்குத்தத்தத்தை வாசிக்கிறோம். ‘நீ பயப்படாதே’. ஆம்!  நம்மை பயப்படாதே என்று மாத்திரம் சொல்லவில்லை, ஏன் பயப்பட வேண்டாம் என்பதை குறித்தும்  சொல்லுவதைப் பார்க்கிறோம். ‘நான் உன்னுடனே இருக்கிறேன்’. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மற்றொரு பெயர் இம்மானுவேல். அதன் பொருள் தேவன் நம்மோடிருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. எனவே தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற நிச்சயத்தோடு வாழுகிற ஒரு வாழ்க்கை நம்மிடத்தில்  உண்டா? அவருடைய வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நாம் விசுவாசிக்கிறோமா? நீங்கள் அதை நம்பும்பொழுது, நிச்சயமாக தேவன் உங்களோடு கூட இருக்கிறார் என்பதைச் சொல்ல முடியும்.

மோசேயின் மரணத்திற்கு பின்பு யோசுவாவை பார்த்து தேவன், “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (யோசுவா 1:5). என்று சொன்னார். இங்கே தேவன் யோசுவாவை தைரியப்படுத்துவதைப் பார்க்கிறோம். யோசுவா இவ்வளவு பெரிய  ஒரு பணியைச் செய்யும் படியான வேளையில் ஆண்டவர் இவ்விதம் யோசுவாவைப் பார்த்துச் சொல்லுகிறார். மோசே இல்லாத இந்த சூழ்நிலையில்,  எவ்விதமாக இந்த இஸ்ரவேல் மக்களை வழி நடத்துவது என்று யோசுவா பயந்து கொண்டிருந்த வேளை அது. இஸ்ரவேல் மக்கள் முரட்டாட்டமுள்ள ஜனங்கள் என்று யோசுவா பார்த்திருந்தாலும், ஆண்டவர் இந்த இடத்தில் நான் உன்னுடனே கூட இருக்கிறேன், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று சொன்னார். தேவன் தம்முடைய பிள்ளைகளைக் கைவிடமாட்டார் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அப்பொழுது ஆண்டவர் நமக்கு மிகப் பெரிய காரியத்தை செய்வார்.நடைமுறை வாழ்க்கையில் தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வோடு நம்மால் வாழ முடிகிறதா என்பதை சிந்தித்துப் பார்போம்.