கிருபை சத்திய தினதியானம் 

மார்ச் 3              எளியவனைத் தாங்கும் கர்த்தர்        சங்கீதம் 9:1-20

“எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய

நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை” (சங் 9:18).

      அன்பானவர்களே! நம்முடைய வாழ்க்கையில் தாழ்மையாய் கர்த்தரை சார்ந்துகொள்ளுவதைப் போல உன்னதமான காரியம் வேறெதுவுமில்லை. நாம் அறிவீனர்கள், பெலவீனர்கள், ஞானமற்றவர்கள். அநேக சமையங்களில் நம்முடைய சுய ஞானத்தில் செயல்பட்டு தவறிழைக்கிறோம். பாவம் செய்கிறோம். ஆனாலும் தேவன் தம்முடைய இரக்கமுள்ள கிருபையினால் தம்மை தண்டித்து செயல்படமால் பொறுமையாக இருக்கிறார். மனிதனுக்கு எப்பொழுதும் உகந்த மனநிலை தாழ்மையின் மனநிலையே. அவ்விதமான மனநிலையை தேவன் கனப்படுத்துகிறார். அவர்கள் ஒருபோதும் கர்த்தரால் மறக்கப்படுவதில்லை. அவர்களின் நம்பிக்கையும் கெட்டுப்போவதில்லை.

       “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்” (சங் 72:4) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். நம்முடைய இருதயம் நறுங்குண்டு தாழ்ந்து காணப்படும்பொழுது நிச்சயமாக கர்த்தர் நம்முடைய ஆத்துமாவை இரட்சிப்பார். நம்மை மீட்டு அவருடைய இராஜ்ஜியத்தில் பங்காளிகளாக நம்மை மாற்றுவார். “நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது” (நீதி 23:18) என்று கர்த்தர் சொல்லுகிறார். தாழ்மை எப்பொழுதும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதுகாப்பானதும், கர்த்தரால் கனப்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

      நம்முடைய வாழ்க்கையில் தாழ்மையாய் கர்த்தருடைய சமூகத்தில் நம்முடைய விண்ணப்பங்களை நம்முடைய தேவைகளை, நம்முடைய நிலைகளை அறிக்கையிட்டு கர்த்தரிடத்தில் வருவோம். அவர் மிகுந்த இரக்கமும் கிருபை நிறைந்த தேவன். நம் வாழ்க்கையில் உன்னதமான ஆவிக்குரிய காரியங்களை அவர் கட்டளையிடுவார். அவர் நம் வாழ்க்கையை பொறுப்பெடுத்து செயல்படுவார் என்பதை மறவாதே.