கிருபை சத்திய தினதியானம்

பிப்ரவரி 24         தாழ்வில் உயர்வு          1 சாமு 2:1-11
“அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்” (1 சாமு 2:7)

        கர்த்தரே ஒருமனிதனை தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமாக இருக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. நம்முடைய வாழ்க்கையில் நாம் தாழ்த்தப்படும் பொழுது நாம் கர்த்தரிடத்தில் நம்மை நாமே தாழ்த்துவோம். கர்த்தர் நம் வாழ்க்கையில் ஒரு நோக்கமில்லாமல் தாழ்த்துகிறவர் அல்ல. இருப்பினும் அவர் நம்மை தாழ்த்தினால் நாம் அவரிடத்தில் நம்மை தாழ்த்துவோமாக. அப்பொழுது கர்த்தர் உயர்த்துகிறவராக இருக்கிறார். ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்;” (1 சாமு 2:8).
      நாம் புழுதிமட்டும் தாழ்ந்து போனாலும், தேவன் நம்மை உயர்த்துகிறவராக இருக்கிறார். அவர் நம்மை உயர்த்தும் பொழுது, அது எப்பொழுதும் பாதுகாப்பானதும், நன்மையுமானதாக இருக்கிறது. மனிதன் எப்பொழுதும் தன்னைத் தானே உயர்த்திக்கொள்ள முயல்கின்றான். ஆனால் அவன் அதில் உயர்வதில்லை, இன்னுமாக தாழ்வு நிலைக்கே செல்லுகிறான். ஆகவேதான் சங்கீதக்காரன் “தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்” (சங் 75:7) என்று சொல்லுகிறார்.
       அன்பானவர்களே! தேவன் மாத்திரமே நம்மை உயர்த்த முடியும் என்பதை விசுவாசி. நம்முடைய வாழ்க்கையில் நம்மை தாழ்த்துவதின் மூலமாகவே உயர்த்தப்பட முடியும் என்பதை மறவாதே. எனவேதான் “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகவே நாம் உயர வேண்டுமானால், அதற்கான வழி நம்மை தாழ்த்துவதுதான். தெய்வக் குமாரனே அடிமையின் ரூபமெடுத்து தன்னைத் தாழ்த்தினார் என்று காண்கிறோமே! (பிலி 2:7-8). ஆகவே கிறிஸ்துவுக்குள்ளாக நம்மை நாமே தாழ்த்துவோமாக.