ஜூலை 22
“என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளாகமம் 7:14).
சாலொமோன், மகா உன்னதமான ஆலயத்தை தேவனுக்கென்று கட்டி ஜெபித்த பொழுது கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று (2 நாளா 7:1). தேவன் அதை ஆலயமாகத் தெரிந்துக்கொண்டேன் என்று அங்கீகரித்தப் பினபு மேலே சொல்லப்பட்ட வசனத்தை சாலொமோனுக்குச் சொன்னார். தேவன் மக்கள் தங்களை அர்பணித்து வாழ்வதையே அதிகம் எதிர்பார்க்கிறதைப் பார்க்கிறோம். இன்றும் அநேக மக்கள் தங்கள் ஆலயங்களைக் குறித்தும் கட்டிடங்களைக் குறித்தும் மேன்மைப்பாராட்டுகிறார்கள். ஆனால் தேவனுக்குத் தங்களை அர்ப்பணிப்பதை விரும்புவதில்லை. நீ ஒருவேளை கிறிஸ்தவ பெயரைக் கொண்டிருக்கலாம். இன்று தேவன் உன்னிடத்தில் அதைக் கேட்கவில்லை. அதினால் நீ எவ்விதத்திலும் தேவனிடத்தில் விசேஷித்த மனிதனாக காணப்படமுடியாது.
தேவன் சாலொமோன் கட்டின ஆலயத்தை அங்கிகரித்ததைப் போல, உன்னை அங்கிகரிப்பார் என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார். முதலாவது உன்னை தாழ்த்துவதை தேவன் கேட்கிறார். அதைத்தான் தேவன் உன்னிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். நீ உன்னைத் தாழ்த்துவதுதான் முதல் படி. தாழ்த்துவது என்று சொல்லும்போது உன் பெருமையை உடைக்கவேண்டும். மனிதனில் இருக்கும் பெரிய பிரச்சனை அது தான். பெருமை உடைபடாமல் தாழ்மையில்லை.
பரிசேயன், ஆயகாரன் இருவருமே ஜெபித்தார்கள். அதுவும் ஜெப ஆலயத்தில் ஜெபித்தார்கள். ஆனால் ஒருவனின் ஜெபம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றொருவனின் ஜெபம் புறக்கணிக்கப்பட்டது. பரிசேயன் ஜெபித்தான், ஆனால் அவன் சுயபெருமை நிரம்பினவனாய் ஜெபித்தான், அவனுடைய ஜெபம் கேட்கப்படவில்லை. ஆனால் ஆயக்காரன் தன்னத் தாழ்த்தி ஜெபித்தான் “பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று ஜெபித்தான். அவனுடைய ஜெபம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தாழ்த்தி ஜெபிப்பதே மெய்யான ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.