மார்ச் 14       

“அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள்”

யோனா 3:5

      நினிவே மக்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட செய்தியை அந்த மக்கள் கேட்டபொழுது, மனந்திரும்பி விசுவாசித்து தங்களைத் தாழ்த்தினார்கள். இரட்டுத்திக்கொண்டார்கள் என்று சொல்லும்பொழுது, அவர்கள் முற்றிலும் தங்களை தரைமட்டுமாக தாழ்த்தினதைக் குறிக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் ஒன்று விளங்கிக் கொள்ள வேண்டிய காரியம், இரக்கம் என்ற பதத்தை அடிக்கடி வேதத்தில் பார்க்கிறோம். இரக்கம் என்று சொன்னால் நம்முடைய அக்கிரமங்களுக்கு தக்கதாக தேவன் நமக்கு சரி கட்டாமல் இருப்பதாகும். நாம் மெய்யாலும் நம்முடைய பாவங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

            ஆண்டவருக்கு முன்பாக நாம் குற்றமில்லவர்கள். தேவன் தம்முடைய இரக்கத்தின் நிமித்தமாக நம்மை அழிக்காமல், தண்டிக்காமல் விட்டு வைத்திருக்கிறார். நாம் ஏதோ நீதி உள்ளவர்கள் என்பதினால் கர்த்தர் இம்மட்டும் நம்மைக் காத்து வருகிறார் என்று அர்த்தமல்ல. இத்தனை ஆபத்துகள், விபத்துகள், மரணங்கள், அழிவுகளிருந்து கர்த்தர் தம்முடைய இரக்கத்தினால் நம்மைப் பாதுகாத்து வருகிறார். அநேக சமயங்களில் நாம் அதை மறந்து விடுகிறோம். ஆனால் நினிவே மக்களைப் போல நாம் நம்மைத் தாழ்த்துவோமானால் எவ்வளவு நலமாக இருக்கும். நம்மைத் தாழ்த்தி தேவ சமூகத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போமானால் வாழ்க்கையில் தேவன் பெரிய காரியங்களைச் செய்வார்.

      நினிவே மக்களை தேவன் அழிக்க விரும்பவில்லை. அவர்களுக்காக பரிதபித்தார் என்று பார்க்கிறோம். “அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்” (யோனா 3:10). நாம் நியாயமாய் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் ஆண்டவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவோம். கர்த்தர் நமக்கு இரங்குவார். அது நம்முடைய வாழ்க்கைக்கு நிலையான ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவதாக இருக்கும்.