கடவுளைத் தேடி கண்டடைவது எப்படி?

-பீட்டர் மாஸ்டர்ஸ்

How to Seek and Find the Lord

Peter Masters

சாலொமோன் ராஜா நீதிமொழிகள் 2-ம் அதிகாரத்தில் சொல்லியிருக்கிற தேவ வார்த்தைகளைக் கருத்தாய் வாசியுங்கள். “என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்” (நீதிமொழிகள் 2:1-5).

   கடவுளின் கனிவான அழைப்பு: தன்னுடைய வாழ்க்கையில் மாறுதலில்லாமல் தொடர்ந்து பழைய நிலைமையிலேயே ஓடிக் கொண்டிருக்கிற மனிதன், தன் வாழ்க்கையை நோக்கமற்றவனாய் வீணாய்க் கழிக்கிறவன். இவ்விதமானவன், வாழ்க்கை முழுவதும் கடவுளை விட்டு விலகித் திரிகிறவனும், இவ்வுலகத்தின் அனைத்து கவர்ச்சிகளின் பின்னால் ஓடினாலும் மெய்யான வழியைக் காணாமல் அநேக வேதனைகளைச் சந்திக்கிறவனுமாக இருப்பான். எனினும், வருடங்கள் கழிந்தாலும் அநேகர் தோற்றுப்போகிற வழியையே தெரிந்து கொண்டு அதைப் பின் தொடருகிறார்கள்.

   சாலொமோன், இந்த மாயையான உலகிலிருந்து ஆத்துமாக்களை விடுவிக்க கூடுமானால் நலமாயிருக்கும் என்று சொல்லுகிறார். இந்த மாயையான உலகமானது அநேகம் பொய்யான வார்த்தைகளைச் சொல்லி மனிதனின் இருதயத்தையும் மனதையும் வீணாய் கொள்ளையிடுகிறது. ஆகவே சாலொமோன் ஞானி அநேக கனிவோடு கூடிய அக்கறையுடன் இவ்விதம் அழைக்கிறார். ‘மகனே நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்’. தேவனுக்கு நாம் செவிகொடுத்து, அவர் பக்கமாக திரும்புவோமானால் அவரின் வல்லமையைக் குறித்தும் அவர் நம்முடைய வாழ்க்கையில் எவ்விதம் செயல்படக்கூடியவர் என்பதையும் மெய்யாய் அறியக் கூடிய ஞானமும், பகுத்தறிதலும் நமக்குச் சொந்தமானதாக இருக்கும். அவ்விதம் செவி கொடுப்போமானால் என்று சொல்லப்படுவது நிபந்தனையாகவும் வாக்குத்தத்தமாகவும் இருக்கிறது.

கடவுளுடைய செய்தி தெளிவாய் சொல்லப்பட்டிருக்கிறது:

   ‘என் மகனே நீ என் வார்த்தைக்குச் செவி கொடுப்பாயனால்’ அவை சாலொமோனின் வார்த்தைகள். ஆனால், சரியாய்ச் சொல்லுவோமானால், அவை தேவனுடைய சத்தியம். இந்த வார்த்தைகள் மூலம் நமக்கு இந்த ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவைகள் அர்த்தமுள்ளவைகளும், மிகவும் முக்கியமானவைகளுமாயிருக்கின்றன.

   மனித  சமுதாயத்திற்கு கடவுள் கொடுத்துள்ள வார்த்தைகள் விளங்கிக் கொள்ள முடியாதவைகளோ அல்லது புதிரானவைகளோ அல்ல. அவைகள் புரியாதவைகளாக, தெளிவற்றவைகளாக அல்ல. உண்மைதான்! கடவுளுடைய ஆழமான வெளிப்பாடுகள் அதில் உண்டு. சில காரியங்கள் முற்றிலும் விளங்கிக் கொள்ள கடினமாகக் காணப்பட்டாலும், தேவனுடைய முழுச்செய்தி, சத்தியம், தெளிவாய் அறிந்து கொள்ளக்கூடிய விதத்தில் எளிய முறையில் சொல்லப்பட்டிருக்கிறதென்பதை மறுக்க முடியாது.

   கடவுளைக் குறித்த சத்தியங்களாகிய அவர் யார்? அவர் எவ்விதமானவர்? மனிதனை அவர் ஏன் உண்டாக்கினார்? மனிதன் எவ்விதம் விழுந்து போனான்? நாம் இரட்சிக்கப்பட கடவுள் என்ன செய்திருக்கிறார்? நாம் அவரை எவ்விதம் கண்டடைய முடியும்? நான் எவ்விதம் அவரோடு நடக்க, வாழ முடியும்? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் தேவ புத்தகத்தில் மிக அழகாகவும் தெளிவாகவும் பதில் சொல்லப்பட்டிருக்கின்றன.

   நம்முடைய வாழக்கையை ஒளியேற்றி பிரகாசிக்கவும், கடவுளுக்கு நெருக்கமாக நன்மை கொண்டுவரவும் தேவையான அடிப்படை சத்தியங்கள் கடவுளால் நமக்கு அர்த்தமுள்ள வார்த்தைகள் மூலமாகவும், என்றும் மாறாத சத்தியத்தின் வாயிலாகவும் தெளிவாய் கூறப்பட்டிருக்கின்றன.

   அப்படியானால், தேவனுடைய செய்தி விளங்கிக் கொள்ளக் கூடாத இரகசியமல்ல. அநேக வருடங்களாக தியானம் செய்து, இரகசியங்களை அறிந்து கொண்டு கடவுளுக்கு நாம் நெருக்கமாக வரவேண்டிய அவசியமில்லை. அப்படியாக வேதம் எங்கும் சொல்லவில்லை. நாம் வாசித்து விளங்கிக் கொள்ளக் கூடிய விதத்தில் தெளிவான வார்த்தைகளாக கடவுளுடைய வார்த்தை இருக்கிறது.

   மேலும், கடவுளுடைய வார்த்தையை விளங்கிக் கொள்ளுவதில் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படக் கூடியதாகவுமல்ல. இங்கு சாலொமோன் தெளிவான விதத்தில் எளிமையாக தேவனைக் கண்டடைவது எப்படி என்று அதை உனக்கு போதிக்கிறேன் என்று சொல்லுகிறார்.

   வேதப்புத்தகம் கடவுளுடைய புத்தகமாக இருக்கிறது. வேதத்தில் மனிதன் எவ்விதம் கடவுளை விட்டு தூரப்போயிருக்கிறான் என்பதையும், கடவுள் எவ்விதம் மனிதனுடைய பாவத்திற்காக கிறிஸ்துவின் மூலமாக பிராயச்சித்த பலியைச் செலுத்தியிருக்கிறார் என்பதையும், மனிதனின் இரட்சிப்புக்கு தேவையானதைத் தேவனே செய்து முடித்திருக்கிறார் என்பதையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

   வேத புத்தகத்தில் கிறிஸ்துவை விசுவாசிக்கும் எல்லா  மக்களின் அனைத்துப் பாவங்களுக்காகவும் கிறிஸ்து எவ்விதம் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, பாடுபட்டு மன்னிப்பைச் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்பதையும், கடவுளோடு மனிதன் தனிப்பட்ட உறவு எவ்விதம் கொள்ள முடியும் என்பதும் தெளிவாகச் சொல்லபட்டிருக்கிறது. நாம் அவ்விதம் செய்வோமானால், தேவனைக் கண்டு கொள்ளுவோம் என்றும், அற்புதமாக நாம் வாழ்க்கையை கடவுள் மாற்றுவார் என்றும், இந்த வாழ்க்கையிலும் நித்திய நித்தியமாக இருக்கும் அவரைக் கண்டு கொள்ளுகிறவர்களாக இருப்போம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இவைகள் அனைத்தும் மிகவும் ஆழமாக தெளிவாக வேதப்புத்தகம் முழுவதுமாக சொல்லப்பட்டிருக்கிறது.

   சாலொமோனின் வார்த்தையில் நாம் தெளிவாக விளங்கிக் கொள்வது என்னவென்றால் நாம் மற்ற அநேக ஆராய்ச்சி மூலமாகவோ, அநேக மதங்களைக் குறித்துப் படித்து தெரிந்து கொள்ளுவதின் மூலமாகவோ அல்ல. கடவுள் ஒரு மனிதனை இரட்சிக்கும் அவருடைய வழியைப் பற்றி தேவனுடைய வார்த்தைக்குச் செவி கொடுப்பதின் மூலமாகவே அறிந்து கொள்ள முடியும். நாம் அதை விசுவாசித்து அதற்கு கீழ்ப்படிவத்தின் மூலமாகவே அவரைக் கண்டு கொள்ள முடியும். ஆகவே தான் சாலொமோன் என் மகனே, என் வார்த்தைக்குச் செவிக்கொடுப்பாயனால் என்று சொல்லியிருக்கிறார்.

 மேலும், சாலொமோன் என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து என்று சொல்லியிருக்கிறார். கட்டளைகளை என்பது கீழ்ப்படிய வேண்டியவைகள். அவைகள் முடிந்தால் ஏற்றுக் கொள்ளலாம், இல்லையென்றால் விட்டுவிடலாம் என்றல்ல. கடவுளுடைய வார்த்தையானது நமக்கு கட்டளையாக இருக்கிறது.

   நாம் நினைவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால் நாம் கடவுளுடைய வார்த்தைக்கு கீழ்படிவதைக் கொண்டே நியாயந்தீர்க்கப்படுவோம். கடவுள் தம்முடைய இரக்கத்தினிமித்தம் நாம் கீழ்ப்படியும்படியாக இவைகளைத் தம்முடைய வார்த்தையில் சொல்லியிருக்கிறார். ஆகவேதான் எல்லோரும் மனந்திரும்ப, கீழ்ப்படிய வேண்டுமென்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். தேவன் தம்முடைய உருக்கமான இரக்கத்தோடு இவ்விதம் வேண்டிக் கொள்வதால், அதில் உள்ள அதிகாரத்தை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. கடவுள் நம்மை இரட்சிக்கும்படியாக வேறு வழிமுறை ஒன்றையும் வைக்கவில்லை. நம்முடைய சொந்த வழியைக் கொண்டு நாம் ஒருக்காலும் நம்மை இரட்சித்துக் கொள்ள முடியாது.

இணங்கிக் கொடுப்பது இரட்சிப்புக்கு நேராக வழி நடத்துகிறது:

   சாலொமோன் வேண்டிக்கொள்வதில், இரட்சிக்கப்படுவதின்  மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளைச் சொல்லுகிறார். அவைகள்: 1. ஞானம் 2. உணர்ந்து கொள்ளுதல் அல்லது விளங்கிக் கொள்ளுதல். இவைகளை கடவுள் நமக்குக் கொடுக்க ஆயத்தமுள்ளவராக இருக்கிறார் என்பதை நாம் உண்மையிலேயே விளங்கிக் கொள்ளுகிறோமா? அவர் நமது வாழ்க்கையை நடத்தக்கூடிய உண்மையான ஞானத்தை நமக்குக் கொடுக்கிறார். நாம் அவரோடு நெருங்கி ஜீவிக்க, அவருடைய வார்த்தையை அறிந்து கொள்ள, அவருடைய வழிநடத்துதலைத் தெரிந்து கொள்ள நமக்குத் தேவையான தேவ அறிவை, ஞானத்தைக் கொடுக்கிறார். கடவுளுடைய வார்த்தைக்குச் செவிக்கொடுத்து இணங்கிக் கொடுக்கிற ஒவ்வொருவருக்கும் தேவன் இவைகளைக் கொடுக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

   மேலும், சாலொமோன் தேவனைக் கண்டடைவதில் உள்ள அனுபவத்தை இவ்விதம் எடுத்துச் சொல்லுகிறார். ‘கர்த்தருக்குப் பயப்படுத்தல் இன்னதென்று நீ உணர்ந்து தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்’. இங்கு இரட்சிப்பின் ஒரு அருமையான தோற்றத்தைப் பார்க்கிறோம். ஒரு காலத்தில் நான் விசுவாசியல்ல. கடவுளை குறித்த உணர்வு என்னில் இல்லை. அவரோடு எந்தத் தொடர்பும், ஐக்கியமும் இல்லை. ஆனால், இரட்சிப்பிற்குப் பிறகோ அவருடைய வல்லமையை என் வாழ்க்கையில் அனுபவிக்கிறேன். கிருபையும், இரக்கமுள்ள நித்தியமான பரிசுத்த கடவுளை கண்டிருக்கிறேன். ஏன் மெய் விசுவாசிகள் கடவுளை இவ்வளவாய் நேசித்து அவரையே தன் வாழ்க்கையின் மையமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுகிறேன். ஏனென்றால் அவைகளை நான் என் வாழ்க்கையில் அனுபவிக்கிறேன் என்று சொல்லுகிறவனாய் மாறி விடுகிறான்.

   இரட்சிப்பிற்கு முன்போ கடவுள் இல்லை என்கிற நிலை. ஆனால், தற்போது நான் அவரை ருசிக்கிறேன், விளங்கிக்கொள்ளுகிறேன். அவருடைய இரக்கத்தையும், கிருபையையும், வல்லமையையும் அறிகிறேன். அது என்னுடைய வாழ்க்கையை, குணத்தை, விருப்பத்தை மாற்றிவிட்டது. அது இரட்சிப்பு என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ளச் செய்கிறது. அதாவது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று உணர்ந்து கொள்ளச் செய்கிறது. அப்படியானால், நாம் எவ்விதம் இந்த அனுபவத்திற்குள் வரமுடியும்? ஆண்டவரை விசுவாசித்து அவரைக் கண்டடைவது என்றால் என்ன? சாலொமோன் உபயோகப்படுத்தியிருக்கும் வினைச்சொற்களின் மூலம் வழியைக் கண்டு கொள்வோமாக.

1. விசுவாசிப்பது என்பது கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்வது:

   முதலாவது சாலொமோன் ‘என் மகனே என் வார்த்தைகளை ஏற்றுக் கொள்வாயானால்’ என்று சொல்லுகிறார். ஏற்றுக் கொள்வது என்பது ஒரு செயல்படுத்தும்படியான வார்த்தையாக இருக்கிறது. மூலபாஷையிலும், அவ்விதமாகவே சொல்லப்படுகிறது. அதாவது அதைத் தழுவிப் பற்றி கொள்வது, உடன்படுவது என்று பொருள்படுகிறது. வேறு விதத்தில்  சொல்லப்போனால், அதை அதிக கவனத்தோடு செவிகொடுத்து, ஏற்றுக்கொள்வது, சந்தேக்தோடு அல்ல, அதாவது நான் கேட்பது எனக்கு சந்தேகமாயிருக்கிறது, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றல்ல. நாம் சந்தேகத்தோடு அதைக் கேட்டு, அலட்சிய மனப்பான்மையோடு செவி கொடுப்பதல்ல. நாம் கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்படியான சிறந்தமுறை என்னவென்றால் தாழ்மையான உணர்வோடும், திறந்த மனதோடும் ஏற்றுக்கொள்வதே. ‘ஆண்டவரே நீர் என்னோடு பேசும்’ என்று கடவுளுடைய வார்த்தையண்டை வருவதே சரியான வழியாகும். 

   மேலும், ஏற்றுக்கொள்ளுவது என்றால் கடவுளுடைய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானது என்று ஒப்புக் கொள்வதாகும். நீங்கள் சொல்ல வேண்டியது என்னவென்றால், இது உண்மையானது. இந்த இரக்கமுள்ள கடவுள் எனக்கு இரட்சிப்பை இலவசமாகக் கொடுக்கிறார். அவர் தன்னைப்பற்றி எனக்குப் போதிக்கிறார். நானோ கடவுளைவிட்டு தூரப்போனவன், பாவியான கலக குணமுள்ளவன், பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர். அவரைப் பற்றியும், அவரை நான் எப்படி கண்டுகொள்ள முடியும் என்பதையும் எனக்கு தம்முடைய வார்த்தையில் தெரிவித்திருக்கிறார். நான் அதற்குப் பதிலாக எப்படி செயல்பட வேண்டும்? நான் அதை ஏற்றுக் கொண்டு எனக்குரியதாக்கி கொள்ளுவேன். நான் விசுவாசித்து அதை எனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளுவேன் என்பதே.

  கடவுளுடைய வார்த்தையண்டை வரும்படியான ஒரே வழி இதுவே. நிச்சயமாக நீங்கள் எல்லா பகுத்தறியும்படியான உணர்வோடு வரலாம். ஆனால், கடவுளுடைய செய்தியண்டை வேண்டா வெறுப்போடு, சந்தேகத்தோடு வரக்கூடாது. நீங்கள் ஏதோ எல்லாம் அறிந்தவர் என்றும் தேவன் ஏதோ ஒன்றும் அறியாதவர் போல நினைக்க கூடாது. அவர் உங்களைக் கட்டாயப்படுத்துவதால் அவர் உங்களுக்குக் கீழானவர் போலல்ல. ஒருபோதும் அவ்விதம் நாம் தேவ வார்த்தையண்டைக்கு வரக்கூடாது. உன்னை உருவாக்கினவரும், உன்னை நியாயந்தீர்க்கப் போகிறவரும் அவரே. நீங்கள் ஏற்றுக் கொள்ளுகிற மனப்பான்மையோடு உங்களை ஜீவனுக்கேதுவாக நடத்தும்படியான தெளிவான தேவ வார்த்தைக்குச் செவி கொடு. அது உங்கள் ஆத்துமாவுக்கு நன்மையாக இருக்கும்.

2. விசுவாசிப்பது என்பது முழு வாழ்க்கைக்கும் நம்மை அர்ப்பணிப்பது:

   சாலொமோன் அடுத்துச் சொல்லும் வினைச்சொல் ‘என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி’ இது மிகவும் முக்கியமான ஆலோசனை. அதாவது, விலையேறப் பெற்றவைகளை பத்திரப்படுத்துவது போல தேவனுடைய வார்த்தையை பத்திரப்படுத்த வேண்டும். அதை எப்போதும் காத்துக் கொள்ளும்படியாக உனக்குரியதாக்கிக் கொள். தேவனுடைய இரட்சிப்பு, மனிதர்களை, அவர்களுடைய வாழ்க்கையை மாற்றுகிறது. நித்திய மட்டுமாக மாற்றுகிறது. இதை நாம் உணர முடிகிறதா? மாணவர்கள் தங்களுடைய பரீட்சைகளுக்குப் படிக்கும் போது அவைகளை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும் என்று படிப்பதில்லை. பரீட்சை எழுதுமட்டுமாக அவைகளை மனதில் கொண்டிருந்தால் அது போதுமானது என்றே படிக்கிறார்கள். ஆனால், கடவுளுடைய வார்த்தையை நாம் அவ்விதம் கருதக்கூடாது. துன்ப நேரத்தில் மாத்திரம் நாம் தேவனுடைய வார்த்தையை நம்புகிறவர்களாக இருக்கக்கூடாது. இந்தக் காலத்தில் நான் துன்பத்தின் வழியாக கடந்து செல்லுகிறேன். ஆகவே தேவனுடைய வார்த்தையை கேட்க விரும்புகிறேன். இந்தக் காலத்தை கடந்து செல்ல எனக்கு அது உதவலாம். இந்தத் துன்பத்திலிருந்து வெளிவர கடவுள் எனக்கு உதவுவாரானால் நலமாயிருக்கும். அதற்குப் பின்பு தொடர்ந்து கடவுளைப் பின்பற்றுவதைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லுவது கடவுளுடைய வார்த்தையை விசுவாசிப்பதல்ல, பத்திரப்படுத்துவதல்ல, அது கடவுளுடைய வார்த்தையை தவறாகக் கைக்கொள்வதாகும்.

   நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், வேதம், கடவுளுடைய வார்த்தை, அது என் வாழ்க்கை முழுவதற்கும் உரியது. நான் தேவனுக்கேற்றவனாய் இப்போதும், எப்போதும் வாழ விரும்புகிறேன். இந்த கடவுளுடைய வார்த்தையை நான் படிக்கும் மற்ற புத்தகங்களை போல் அல்ல. இதில் என் நித்திய ஆத்துமாவின் இரட்சிப்பு அடங்கியிருக்கிறது, அவ்விதமான மனதோடு கடவுளிடத்திற்கு வா, கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். 

3. விசுவாசிப்பது என்பது முழுமையான கவனத்தைக் கொடுப்பது:

   சாலொமோனின் அடுத்த வினைச்சொல் உண்மையான நம்பிக்கையின் மற்றொரு அத்தியாவசியமான பகுதியை காட்டுகிறதாக இருக்கிறது.  அவர் சொல்லுகிறதாவது, ‘உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து’ இங்கு செவியை சாய்த்து என்பது ஒருமுகப்படுத்துவதையும், முக்கியத்துவம் கொடுப்பதையும் குறிக்கிறது. நாயானது கேட்பதற்கு தன் காதுகளை உயர்த்துகிறது. மனிதர்களும் கேட்பதற்கு சத்தத்தின் பக்கம் தன் காதுகளைத் திருப்புகிறார்கள். அநேக காரியங்களுக்கு நாம் செவி கொடுக்கும் பொழுது அவைகளுக்கு அவ்வளவு அக்கரையாக, கருத்தோடு செவி கொடுப்பதில்லை. சாதாரணமாக செவி கொடுக்கிறோம். இந்த வசனத்தில் செவி சாய்ப்பது என்று சொல்லப்படுவது ஒரே கருத்தோடு மனதோடு கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது.

   இந்த காலத்தில் நாம் அநேக சத்தங்களால் நெருக்கப்படுகிறோம். தெய்வபக்தி இல்லாத இந்த உலகம் நம்மை நோக்கி என்னோடு வா என்றும், என்னோடு வந்து இணைந்து கொள் என்றும் சத்தம் கொடுக்கிறது. தன் பக்கம் இழுக்கும்படியாக அநேக ஆயிரக்கணக்கான கவர்ச்சியான உலக சத்தங்கள் எப்பக்கத்திலும் எழும்பிக் கொண்டிருக்கின்றன. அதின் மத்தியில் வேதாகமத்தில் சத்தம் கேட்கிறது. மற்றவைகளின் பக்கமாக நம்மை இழுக்கும்படியான அநேக சத்தங்கள் மத்தியில் நாம் கடவுளுடைய சத்தத்தை எவ்விதம் தெளிவாய்க் கேட்பது அல்லது விசுவாசிப்பது? நமது மனதானது உலகத்திற்கடுத்த காரியங்களில் அதாவது இந்த உலகத்தில் நான் எப்படி அநேக காரியங்களைப் பெற்றுக் கொள்ளுவேன் என்றும், இந்த உலகத்தில் என் ஆசைகளை எவ்விதம் திருப்தி செய்வேன் என்றும் நிரம்பியிருக்கும் பொழுது கடவுளுடைய சத்தத்திற்கு நாம் செவி கொடுக்க முடியாது.

   வாரத்தில் ஒரு முறை மாத்திரம் கடவுளுடைய சத்தத்தைக் கேட்கிறவர்களாகவும் மற்ற வேளைகளில் உலகத்தின் கவர்ச்சிக்கும், தேவபக்தியற்ற சோதனைகளுக்கும் செவி கொடுப்போமானால், நாம் ஒருபோதும் கடவுளை கண்டடைய முடியாது, இரட்சிக்கப்பட முடியாது. சாலொமோன் கடவுளுடைய வார்த்தைக்கு மட்டும் செவிகொடுக்கும்படி ஜாக்கிரதைப்படு என்றும், கடவுளுடைய வார்த்தையின் பக்கமாக உன் செவியை சாய், மற்ற எல்லாவற்றிற்கும் உன் செவியை விலக்கு என்றும் சொல்லுகிறார்.

   நீங்கள் கடவுளை கண்டடைய வேண்டுமானால் இவ்விதம் சொல்லக் கூடியவனாக இருக்க வேண்டும். நான் இழக்கப்பட்டுப் போனவன். ஆவிக்குரிய பிரகாரமாக  கடவுளை விட்டு துண்டிக்கப்பட்டவன், இதுவோ கடவுளுடைய சத்தியமாக இருக்கிறது. இந்தச் செய்தியானது ஜீவனுக்கேதுவானதும், நித்தியத்துக்கு ஏதுவானதுமாக இருக்கிறது. கடவுளுடைய வார்த்தை இரட்சிப்பைக் குறித்தும், வாழ்க்கையின் அர்த்தத்தைக் குறித்தும் சொல்லுகிறது. நான் கடவுளுடைய செய்திக்கு மாத்திரமே செவி கொடுப்பேன், இதுவே என்னுடைய முதலாவது முக்கிய கடமை.

4. விசுவாசிப்பது என்பது ஒப்புக்கொடுப்பதும், கீழ்ப்படிவதுமாகும்:

   நாம் கடவுளைத் தேடுவதில் சரியான மனப்பான்மையைக் கொண்டிருக்கிறோமா? மேலும் சாலொமோன் ‘உன் இருதயத்தை புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு’ என்று சொல்லுகிறார். எபிரேய மொழிப்பெயர்ப்பில் அமையப்பண்ணும் பொருட்டு என்று சொல்லப்படுகிற பதமானது வளை என்று பொருள்படுகிறது. அதாவது கடினமான வளையாத இருதயத்தை விசுவாசிக்கும்படியாக வளைக்க வேண்டும். இதுவே உண்மையாகவும் இருக்கிறது. இயற்கையாக நாம் முரட்டாட்டமுள்ளவர்களாகவும், எதிர்க்கிறவர்களாகவும், வளைந்து கொடுக்காதவர்களா -கவும் இருக்கிறோம். நான் இதுவரை நினைத்தது தவறு. ஆனால், இப்போது நான் கடவுளுக்கு செவிகொடுப்பேன். இந்த செய்தியானது நான் இணங்கிக் கொடுக்கும்படியாக என்னை அழைக்கிறது. ஆனால், நான் என் இருதயத்தை, சிந்தையை, என்னையே கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று சொல்ல கஷ்டப்படுகிறோம்.

   கடவுளுடைய வார்த்தையை விசுவாசிப்பதென்பது இயேசு பாவிகளுக்காக மரித்தார். பாவ மன்னிப்பையும், நித்திய ஜீவனையும் சம்பாதித்தார் என்று நம்புவது மாத்திரமல்ல. இவைகள் மிகவும் முக்கியமானவைகள் தான். ஆனாலும், இவைகள் மாத்திரமல்ல, ஒரு புதிய கீழ்ப்படிதலின் வாழ்க்கைக்குள் வருவதும், புதிய திசையில் நடக்க நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுப்பதும் அதில் அடங்கும். ஆகவே தான், சாலொமோன் நம்மை வளைப்பது குறித்துச் சொல்லும்போது அது முற்றிலும் ஒப்புக் கொடுப்பது, முற்றிலும் அர்ப்பணிப்பது, தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலும் கீழ்ப்படிவதுமாகும் என்று சொல்லுகிறார்.

5. விசுவாசிப்பது என்பது பெருமையை விடுவது:

   சாலொமோன் சொல்லும் அடுத்த காரியம் உண்மையான விசுவாசமென்பது தேவனுக்குக் கனத்தை செலுத்தி தாழ்மையான சிந்தையை தன்னில் கொண்டிருப்பதாகும். இந்த தேவனுடைய உன்னத மகத்துவத்தையும், மேன்மையையும் எண்ணி, நமது பாவதன்மையையும், ஒன்றுமில்லாமையையும் உணராமல் எப்படி நாம் உண்மையாலும் கடவுளுடைய வார்த்தையை விசுவாசித்து ஏற்றுக் கொள்ள முடியும்? நமது இழந்துபோன, இரட்சிக்கப்படாத தன்மையை உணராமல் எப்படி நியாயத்தீர்ப்பைக் குறித்த, நரகத்தைக் குறித்த செய்தியைக் கேட்கும்போது அதன் பயங்கரத்தைக் குறித்து நடுங்காமல் இருக்க முடியும்? ஆகவே தான் சாலொமோன் ஞானத்தை அதிகம் வாஞ்சித்து தேடுவாயானால் என்று சொல்லுகிறார்.

   நீதிமொழிகள் புத்தகத்தில் இதை ஒரு சிறிய உதாரணத்துடன் சாலொமோன் ராஜா விளக்குகிறார். இந்த உதாரணம் ஒரு குழந்தை தன் பெற்றோர்களைப் பார்த்து கதறுவதைப் போல் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சிறியவன் பெரியவனிடம் கெஞ்சிக் கேட்பது போலவும், அதிகமான தேவையிலிருக்கும் ஒரு மனிதன் கதறிக் கேட்பது போலவுமிருக்கிறது. ஒரு குழந்தை, தானே பெறமுடியாததற்காக அதை கொடுக்கக் கூடியவரிடம் அதிகம் கெஞ்சி பெற வேண்டியிருக்கிறது. அவ்வண்ணமாகவே பாவியான மனிதனும் சர்வ வல்லவரை நோக்கி தாழ்மையாகக் கெஞ்ச வேண்டும்.

   நாமாகவே பெற்றுக்கொள்ள முடியாத காரியங்கள் எவை? நம்முடைய பாவ மன்னிப்பை நாமாகவே உருவாக்கி கொள்ள முடியாது. சொல்லப்போனால் இரட்சிப்பின் செய்தியை நாமாகவே உணர்ந்து, இரட்சிக்கப்பட முடியாது. நாம் ஏழையான, இழந்துபோன பாவிகள். நமக்கு இரட்சகர் தேவை. விசுவாசிப்பது என்றால் இந்த தேவைகளை உணர்வது, கிறிஸ்து மாத்திரமே இந்தத் தேவைகளை சந்திக்க முடியும் என்று அறிந்து நம்முடைய பாவத் தன்மையையும், உதவியற்ற நிலைமையையும் உணர்ந்து, தேவனுடைய வல்லமையையும், மன்னிக்கும் கிருபையையும் சார்ந்து கடவுளை நோக்கிக் கதறுவதாகவும்.

   பெருமையும், சுயதிருப்தியும், சுயநம்பிக்கையும் உள்ளவர்கள் ஒருபோதும் கடவுளுடைய நோக்கி அவ்விதம் கதற முடியாது. தங்களுடைய பாவத்தன்மையை ஆவிக்குரிய அபாயத்தை உணராமல் வெறுமையாக கடவுள் என்று ஒருவர் இருப்பீரானால் உம்மை எனக்கு வெளிப்படுத்தும் என்று ஜெபிப்பது விசுவாசமுள்ள ஜெபமல்ல. கடவுள் அவைகளுக்குப் பதிலளிக்கமாட்டார். கடவுளுடைய வார்த்தையை மெய்யாலுமே உணருகிற மனிதன், உண்மையிலேயே மகா பெரிய தேவையிலிருப்பவனைப் போல கதறுகிறவனாகவும் தேவனையே சார்ந்து அந்த தேவை சந்திக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறவனாகவும் இருப்பான்.

6. விசுவாசிப்பது என்பது நாம் கடவுளுக்கு தூரத்திலிருக்கிறோம் என்று உணர்வது:

   சாலொமோன் நாம் எப்படி தேவனிடத்தில் வருவது என்பது பற்றி இன்னுமொரு கோணத்தில் சொல்லுகிறார். ‘ஞானத்தை வா என்று கூப்பிடு’ என்று சொல்லுகிறார்.  இது ஒரு குழந்தை தன் பக்கத்திலிருக்கும் தாயாரைக் கூப்பிடுவது போலல்ல. தூரத்திலிருக்கும் ஒருவரை உரத்த சத்தமிட்டு அழைக்கும் பிள்ளையைப் போல, அல்லது தெருவில் தூரமாக கடந்துபோன ஒரு வியாபாரியை பொருள் வாங்கும்படி அழைப்பதைப் போல கூப்பிடுவதாகும். ஒருவன் தன்னுடைய நம்பிக்கையற்ற ஆவிக்குரிய நிலைமையை உணர்ந்து நான் இவ்விதம் இருக்கிறேன் என்று கடவுளை நோக்கி கதறுவதாகவும்.

   நாம் இரட்சிக்கப்படாதவர்களானால், தேவனுக்குத் தூரமானவர்களாக இருக்கிறோம். அவருக்கும் நமக்கும் தொடர்பில்லை. தேவனுடைய கோபாக்கினையின் கீழுள்ளவர்களாயிருக்கிறோம். நாம் தேவனை விட்டு வெகுதூரத்தில் இருக்கிறோமென்றும், நித்திய தண்டனைக்கு உரியவர்களாயிருக்கிறோம் என்பதையும் உணர வேண்டும். நாம் ஏதோ ஆண்டவரே எனக்கு கொஞ்சம் உதவி செய்யும் என்று சொல்லுகிறவர்களாக அல்ல. கடவுளை நோக்கி ஆண்டவரே, என்னை உம் பக்கமாக இழுத்துக் கொள்ளும், எனக்கு புதிய ஜீவனைத் தாரும், உமக்கும் எனக்கும் நெருங்கிய உறவைத் தாரும் என்று கதறுகிறவர்களாக காணப்பட வேண்டும்.

7. விசுவாசிப்பது என்பது இரட்சிப்பை வாஞ்சிப்பது:

   மேலும், சாலொமோன் ‘வெள்ளியைப் போல் நாடுவாயானால்’ என்று சொல்லுகிறார். எபிரெய மொழியில் தேடுவது என்று சொல்லுவது நீ பெற்றிராத ஒன்றைக் கருத்தோடு பெரும்படியாக அதை நாடுவது என்று பொருள்படும். இந்தக் குறிப்பிட்ட இடத்தில் தேடுவது மிகவும் தீவிரமாயிருக்கிறது. ஏனென்றால், தேடுவது சாதாரணமானதையல்ல, மிகவும் விலையேறப் பெற்றதாகும். இங்கு வெள்ளி என்று சொல்லப்படும் பொழுது அழகான உருவமாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஒரு வியாபாரி மிக நேர்த்தியான வெள்ளிப் பொருட்களை உருவாக்கும் சிற்ப கலைஞரிடம் கருத்தாய்த் தேடிச் செல்லுவதைக் குறிக்கிறது. அதைத் தேடுவதில் மிகவும் கவனமாயிருந்து அதைக் கடைசியில் கண்டடைவதைக் குறிக்கிறது.

   அதாவது, இந்த இடத்தில் கடவுளுடைய இரட்சிப்பை (பாவமன்னிப்பு, புதிய ஜீவன், கடவுளோடு ஐக்கியப்பட்ட வாழ்க்கை) வெள்ளியைத் தேடும் வியாபாரியைப் போல கருத்தாய் தேடிக் கண்டடைய வேண்டும். அது மிகவும் விலையேறப் பெற்றதும், அதிக அழகானதுமாயிருக்கிறது. அப்படியானால், நான் இதை எவ்வளவு அதிகமாக வாஞ்சித்து தேட வேண்டுமல்லவா? அது எங்கு கிடைக்கும்? என்பதை அறிந்து அங்கு அதைத் தேட வேண்டும். அது கிடைக்கும்படியான இடம் எங்கேயிருக்கிறது? ஆம்! கடவுளுடைய வார்த்தைக்கு நான் செல்ல வேண்டும். கடவுளுடைய வார்த்தை சரியாய் போதிக்கும் படியான சபைக்குச் செல்ல வேண்டும். நான் கடவுளுடைய இரட்சிப்பின் வழியைக் கண்டு விசுவாசிக்க வேண்டும். அவர் என்னை பாவத்தின் அடிமைதனத்திலிருந்து மீட்கும்படியாகச் செய்த பரிகாரத்தை, பாவபலியாக தன்னை ஒப்புக் கொடுத்ததை, எனக்குரியதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

   வெள்ளியைத் தேடும் வியாபாரி அதை பெறுகின்றவரை தொடர்ந்து தேடுவதைப் போல நான் இரட்சிப்பென்னும் பொக்கிஷத்தை தேடுவேன். நான் ஜெபத்திலே கடவுளுக்கு நெருக்கமாய்ச் சென்று என்னுடைய வாழ்க்கையிலே அவரின் திட்டமான தொடுதலைப் பெறுவேன். நான் எவ்வளவாக இதை வாஞ்சிக்க வேண்டும்? கிறிஸ்துவில்லாமல் நான் ஒன்றுமில்லை என்று என் இரக்கத்தின் தேவனிடம் சொல்லுவேன். அவர் மாத்திரமே தரக்கூடிய புதிய வாழ்க்கையின் ஆரம்பமே, இந்த உலகத்தில் எனக்குக் கிடைக்கக் கூடிய மிகப்பெரிய பொக்கிஷம். என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்ற நிச்சயத்தைக் காட்டிலும், மீட்பரும் தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தரான கிறிஸ்துவே என் இரட்சகர் என்பதைக் காட்டிலும் விலையேறப்பெற்றது வேறு என்ன உண்டு! கடவுளை மெய்யாலுமே தேடுகிற மனிதனின் முழு சிந்தனையும் இவ்விதமாகவே இருக்குமென்று சாலொமோன் சொல்லுகிறார்.

8. விசுவாசிப்பது என்பது தொடர்ச்சியாக கடவுளைத் தேடுவது:

 சாலோமோன் கடைசியாக இரட்சிப்பில் ஏற்படும் தடைகளையும், ஆபத்துகளையும் குறித்து மேலும் அவைகளை எவ்விதம் கையாள வேண்டும் என்றும், எச்சரித்துச் சொல்லுகிறார். ‘புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாக’ என்று சொல்லுகிறார். எபிரேய வார்த்தையில் தேடுவது என்று சொல்லப்படுவது சிரமமானதைத் தேடுவதைக் குறிக்கிறது. மேலும் புதைந்துள்ள அல்லது மறைக்கப்பட்டதைத் தேடுவதைக் குறிக்கிறது. தோண்டி கண்டுபிடிக்கும் விலையேறப் பெற்ற உலோகத்தையும், வைரக்கற்களையும் குறிக்கிறது. வேதாகம நாட்களில் வெடிமருந்துகள், நவீன கருவிகள் இல்லை. அந்நாட்களில் சுரங்கங்கள் வெட்டுவது என்பது மிகவும் கடுமையான வேலை. ஆனால், அதே சமயத்தில் மிகவும் அதிகமான பலனை, நன்மையைக் காணக்கூடியதாக இருந்தது. 

   அந்நாட்களில் சுரங்கம் வெட்டும்பொழுது உலோகமோ, நிலக்கரியோ கிடைக்கும் வரை அதைக்குறித்த நிச்சயமில்லை. கிடைக்குமோ, கிடைக்காதோ என்பதை திட்டமாய் அறியார்கள். அவ்விதமாகவே கடவுளை நோக்கி ஜெபிக்க ஆரம்பிக்கும்போது ஆசீர்வாதம் காணப்படாததைப் போல இருக்கலாம். கர்த்தாவே என்னுடைய பாவங்களுக்காக நான் மனஸ்தாபப்படுகிறேன். எனக்கு உம்மை வெளிப்படுத்தும். என்னை உம்முடைய பிள்ளைகளில் ஒருவராக ஏற்றுக்கொள்ளும். என்னை இரட்சியும், மாற்றும் என்று ஜெபிக்கும்போது முதலாவது நாம் தேடும் ஆசீர்வாதம் காணாததைப்போல இருக்கலாம். ஆனாலும், என்னுடைய வாழ்க்கையில் உம்முடைய கரத்தின் தொடுதலை முழுமையாக உணரவில்லை. நான் ஒரு இழந்துபோன பாவியென்று உணருகிறேன். பரலோகத்தின் வாசல் எனக்கு அடைபட்டிருப்பதுபோல இருக்கிறது. நான் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. உமக்கு வெகுதூரத்தில் இருக்கிறேன். தேவனே, நான் உம்மைக் கண்டடைவேனாக, உம்மை அறிந்து கொள்வேனாக, உம்மை பற்றிக் கொள்வேனாக என்று ஜெபிக்க வேண்டும். சாலொமோன் இவ்விதம் நாம் கடவுளைத் தேடுவோமானால் நிச்சியம் அவரைக் கண்டடைவோம் என்று சொல்லுகிறார். நம்முடைய ஜெபத்தைக் கேட்டு அவர் நிச்சயமாக பதில் கொடுத்து ஆசீர்வதிப்பார்.

   சுரங்கம் தோண்டுவது என்பது தேவனைத் தேடுவதில் உள்ள கடினமான பகுதியைக் குறிக்கிறது. நம்முடைய இரட்சிப்பிற்காக நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பது மெய்தான். முற்றிலும் உண்மை. கிறிஸ்து மட்டும் அதின் பரிகாரத்தைச் செலுத்த முடியும். நம்முடைய பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுவதில் மிகச் சிறிய அளவிலும் நம்முடைய பங்கு இல்லை. ஆனாலும் தேடுவதில் உண்டான கடினமான பாதை உண்டு என்பதை மறந்து விடக்கூடாது. வெடிப்பொருட்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு சுரங்கங்கள் தோண்டுவது என்பது ஒரு சாதாராண காரியமல்ல. கைகளும், கால்களும் எவ்வளவாக பாதிக்கப்படும் என்பதையும், மணிக்கணக்காக, நாள்கணக்காக, சுரங்கங்களின் உள்ளேயிருந்து செய்யும் பணியைச் சிந்தித்துப் பாருங்கள். எப்போதும் வெளியே வரமுடியும் என்பது தெரியாமல், நல்ல காற்றை கூட சுவாசிக்க கூடாமல் சுரங்கத்தில் பணி செய்ய வேண்டும்.

   கடவுளைத் தேடுவதும் அவ்விதமாகவே இருக்கிறது. கடவுளைத் தேடுகிறவர் ஆலயத்தை நோக்கி செல்ல வாஞ்சிக்கும் போதும், வேதத்தைத் திறந்து வாசிக்கும்போதும், சோதனைக்காரனாகிய சாத்தான் மனதையும், சிந்தையையும் வேறுபக்கம் திசை திருப்பப் பார்ப்பான். டி. வி யைப் பார், இதைச் செய், அதைச் செய் கடவுளைத் தேடுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சொல்லுவான். எண்ணி முடியாத காரணங்களைக் காட்டி திசை திருப்பப் பார்ப்பான். ஆனால், கடவுளைத் தேடுகிறவர் இந்தப் பிசாசின் எல்லா தந்திரங்களை புறம்பே தள்ள வேண்டும். கடவுளுடைய வார்த்தையைக் கேட்க ஓட வேண்டும். இரட்சிப்பிற்காக மன்றாடி ஜெபிக்க வேண்டும். நமது ஆத்தும எதிராளியாகிய பிசாசானவனுடைய இந்த விதமான எதிர்ப்புகளை மறந்துவிடாமல் அவைகளை உதறித் தள்ளி முன்னோக்கிச் செல்ல வேண்டும். 

   சுரங்கம் தோண்டுவது என்பது மிகவும் ஆபத்தானதும் பயம் நிரம்பியதுமாயிருக்கிறது. பாறைகள் மேலே விழ ஏதுவுண்டு, சரிவுகள் ஏற்பட்டு புதையுண்டு போக வாய்ப்புண்டு. தண்ணீர் வெள்ளம் போல் கீழிருந்து வந்து மூழ்கிவிட ஏதுவுண்டு. அதேவிதமாக கடவுளைத் தேடுகிறவர்கள் இவ்விதமான ஆபத்துக்களை எண்ணி பின்வாங்குவதுமுண்டு. நண்பர்கள் கேலி செய்வார்கள் என்றும், பாவத்தின் இன்பங்களை எவ்விதம் விட்டுவிட முடியும் என்றும் பல விதங்களில் பின்னிட்டுப் போக வாய்ப்பு உண்டு. இவ்விதம் பின்னிட்டுப் போன அநேக மக்களும் உண்டு.  ஆனால், தேவனைத் தேடுகிறவர்கள் அவைகளுக்காக பயப்படாமல், தன்னுடைய கடவுளற்ற வாழ்க்கையைக் குறித்தும், ஆவிக்குரிய மரணத்தைக் குறித்தும், நித்தியத்தில் இழந்து போவதைக் குறித்தும் பயப்பட வேண்டும்.

   அந்த நாட்களில் சுரங்கம் தோண்டுவது என்பதில் எத்தனையோ நிச்சயமற்ற காரியங்கள் உண்டு. சுரங்கத்தின் கீழ் மெய்யாலுமே நிலக்கரியோ, தங்கமோ, விலையேறப்பெற்ற கற்களோ இருக்குமோ, இருக்காதோ என்பதைக் குறித்து சந்தேகமும், அச்சமும் இருந்து கொண்டே இருக்கும். இவ்வளவு நெற்றி வியர்வை சிந்தி, பணம் செலவழித்து மற்றும் பாடுகள் படுவது பிரயோஜனமாய் இருக்குமோ, இருக்காதோ என்ற அச்ச உணர்வோடேயே அதைச் செய்ய வேண்டும். அவ்விதமாகவே பிசாசும் கூட பலவிதத்தில் அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் உங்களிடத்தில் ஏற்படுத்துவான். கடவுள் என்பவர் உண்டா என்றும், கடவுளைத் தேடுவது வீணோ என்றும், நான் மெய்யாலும் சரியாகத் கடவுளைத் தேடுகிறேனோ என்றும் பலவிதமான அச்சங்களை ஏற்படுத்துவான். ஆனால், கடவுளைத் தேடுகிறவர்கள் கடவுளுடைய வார்த்தையை வாக்குத்தத்தத்தை முற்றிலும் சார்ந்து கொள்ள வேண்டும். மனந்திரும்புதலோடும், விசுவாசத்தோடும் எல்லா சந்தேகங்களையும் அகற்றி கடவுளைத் தொடர்ந்து தேட வேண்டும்.

   சுரங்கம் தோண்டுவதில் மற்றுமொரு பகுதியும் உண்டு. அந்த விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை பெறுமட்டுமாக தேவையற்ற அனைத்தையும் நீக்கிக் கொண்டேயிருக்க வேண்டும். மணல், கற்பாறைகள் அனைத்தும் தோண்டி எடுக்கப்பட வேண்டும். கடவுளைத் தேடுவதிலும் இந்தப் பகுதி இருக்கிறது. நாம் நம்முடைய பாவங்களைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, நமது பாவத்தையும் அதின் குற்ற உணர்வையும் கிறிஸ்து நீக்கிப்போட கல்வாரியை நோக்கிப்பார்க்க வேண்டும். கடவுளை நோக்கி நமது சுயவழியை, சுயசித்தத்தின் காரியங்களை, சுயத்தை, அசுத்தத்தை, மனந்திரும்பாத இருதயத்தை நீக்கிப்போட்டு புதிய இருதயத்தைப் பெற கடவுளை நோக்கி கதறி ஜெபிக்க வேண்டும். நம்முடைய பாவங்களை கிறிஸ்து நீக்கிப் போடுமட்டாக, கடவுளை நாம் காண மாட்டோம். விலையேறப் பெற்ற இரட்சிப்பை மனந்திரும்புதல் இல்லாமல் பெற முடியாது.

   கடைசியாக, இவ்வித கடினமான காரியங்கள் சுரங்கம் தோண்டுவதில் இருந்தாலும் தேவனுடைய கிருபையை அது வெளிப்படுத்துகிறது. சுரங்கம் தோண்டுகிறவன் மற்றவர்களைக் காட்டிலும் அதிக உழைக்க வேண்டியிருந்தாலும் அவன் வாழ்நாள் முழுவதற்கும் போதுமான விலையேறபெற்ற பொக்கிஷத்தைக் கண்டடைகிறான். சொல்லப்போனால் வேறு எந்தத் தொழிலிலும் இவ்விதமான ஒரு பெரும் பொக்கிஷத்தை பெறுவது கூடாதது. ஆனால், இங்கே அவன் கடவுளுடைய பெரிதான கிருபை என்கிற பொக்கிஷத்தை பெற்றுக் கொள்கிறான்.

   கடவுளுடைய வார்த்தையை நம்பி, அவரைத் தேடும்பொழுது ஒரு மனிதனுக்கு எப்படிப்பட்ட ஒரு உண்மையான காரியம் நடைபெறுகிறது. நான் செய்வதெல்லாம் விசுவாசிப்பதும், மனந்திரும்புவதும், இரட்சிப்பை கேட்பதும்தான். நான் பெரும்படியான இரட்சிப்புக்கு அது எம்மாத்திரம். நான் அதைப் பெற முற்றிலும் தகுதி அற்றவன். ஆனால், நான் அனைத்தையும் பெற்றுக்கொள்கிறேன். மன்னிப்பு, புதிய வாழ்க்கை, புத்திர சுவிகாரம், நித்திய வாழ்வு என்ற பொக்கிஷம். தேவ கோபாக்கினைக்குப் பாத்திரமான குற்றமுள்ள பாவிக்கு கடவுளுடைய ஈவான நித்திய இரட்சிப்பு கொடுக்கப்படுகிறது. கடவுளுடைய கிருபை (அதாவது இல்லாத பாவிக்கு கொடுக்கும் தயவு) ஒன்றே என்னுடைய நம்பிக்கையாகும்.

   மேலும் சாலொமோன் இவ்விதம் தேவனைத் தேடுவோமாகில் அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று உணர்ந்து கடவுளை அறியும் அறிவைக் கண்டடைவோம் என்று சொல்லுகிறார். அவர் நம்முடைய ஜெபத்தை, கதறுதலைக் கேட்டு நம்முடைய பாவங்களைக் கழுவுவார், மன்னிப்பார். நம்மை இரட்சித்து அவரோடு ஜீவனுள்ள தொடர்புக்கு நம்மை உட்படுத்துவார்.  

கடவுளைத் தேடி கண்டடைவது எப்படி? (Download PDF)