கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட் 2                  நம்பிக்கையுள்ள வாழ்க்கை             சங்கீதம் 31:1-24

“என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது;” சங்கீ 31:15

            எவ்வளவு ஒரு ஆறுதலான தேவனுடைய வார்த்தை இது! நம்முடைய காலங்கள் நம்முடைய கரத்தில் இல்லை. நம்முடைய காலங்கள் சாத்தானின் கரத்திலுமில்லை. நம்முடைய காலங்கள் நம்மை உண்டாக்கின தேவனுடைய கரத்தில் இருக்கிறது. அவருடைய கரத்தில் இருக்கும் நம்முடைய காலங்கள் எப்பொழுதும் பாதுகாப்பானதாகவும், நம்முடைய வாழ்க்கைக்கு ஏற்றதாகவும் இருக்கிறது. அருமையான சகோதரனே சகோதரியே, உன்னுடைய வாழ்க்கையில் நிலை தெரியாமல் பயப்படுகிறாயா? எதிர்காலத்தைக் குறித்த பயம் உன்னை ஆட்க்கொண்டுள்ளதா? பயப்படாதே உன்னுடைய காலங்களை தேவன் குறித்திருக்கிறார். கர்த்தர் நல்லவர், உன்னுடைய வாழ்க்கையில் தேவனை சார்ந்து கொள்ளும்பொழுது, நிச்சயமாக நன்மையான காரியங்களை செய்வார்.

            அப்போஸ்தல நடபடிகள் 23:11 -ல் “அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்”. பவுலை யூதர்கள் திட்டமிட்டு, ஏறக்குறைய கொலை செய்துவிடுவார்கள் என்ற சூழ்நிலை வந்த பொழுது, கர்த்தர் பவுலைப் பார்த்து இவ்விதமாக பேசினார். தேவன் அறியாதபடிக்கு நம்முடைய வாழ்க்கையில் நேரிடுவது ஒன்றுமில்லை. அவருடைய திட்டமில்லாமல் நம்முடைய வாழ்க்கை முடிவதுமில்லை.

            ஆகவே நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையை அவருடைய கரத்தில் ஒப்புவித்து, அவர் நம்மைக் கொண்டு திட்டமிட்டிருக்கும் காரியங்களை தைரியமாக செய்யலாம். இந்த உலகம் ஒரு அநித்தியமானது. ஆனால் உனக்கும் எனக்கும் இந்த அநித்தியமான உலகத்தைவிட்டு பிரிந்து, அவரோடு இருக்கும் படியான நித்தியமான வாழ்க்கையை வைத்துள்ளார். அதற்கு நாம் செய்யவேண்டியது, அவரோடு உறவு கொள்ளும்படியான சரியான வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பது மிக அவசியம். கர்த்தரிடத்தில் உண்மையுள்ளவனாக இரு. அவரோடு ஐக்கியம் கொண்ட வாழ்க்கையை வாழ். தேவன் உன்னுடைய வாழ்க்கையை அவர் பொறுப்பெடுத்து செயல்பட்டுவார். வெற்றியோடே உன் ஓட்டத்தை ஓடு.