ஜூன் 10

“எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை”(சங்கீதம் 9:18).

      நம் வாழ்க்கையில் எளிமையான சிந்தை, தாழ்மையான மனதிருக்குமானால் கர்த்தர் ஒருக்காலும் நம்மை மறந்துவிடமாட்டார். மேட்டிமையான சிந்தனைகள் எப்பொழுதும் கர்த்தரைவிட்டு நம்மை தூரப்படுத்துகிறது. ஆனால் தாழ்மையின் சிந்தை எப்பொழுதும் கர்த்தரால் கனப்படுத்தப்படுகிறது. ஆகவே நாம் தாழ்மையின் சிந்தையைக் கொண்டிருக்கும்பொழுது நம் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது. ஒருவேளை உன் வாழ்க்கையில் எதிர்காலத்தைக் குறித்த பயமிருக்குமானால் கர்த்தர்மேல் உன் நம்பிக்கையை வை. நீ ஒருபோதும் வெட்கப்பட்டுப் போகமாட்டாய். உன் வாழ்க்கையை கர்த்தர் கட்டி, நிலைவரப்படுத்துவார்.

      “ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்” (சங்கீதம் 72:4) என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே கர்த்தர் உன் காரியங்களை விசாரித்து, உன்னை இரட்சிப்பார் என்பதை மறந்துவிடாதே. ஆகவேதான் “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்” (சங்கீதம் 72:12) என்று வேதம் சொல்லுகிறது,. ஆபத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடு, மனிதனை நீ நம்புவது வீண். தாழ்மையான சிந்தையுடன் கர்த்தரிடத்தில் உன் விண்ணப்பங்களை ஏறெடு. உன் நம்பிக்கை ஒருபோதும் வீணாகப் போகாது. அவர் எளியவனின் கூக்குரலைக் கேட்கிறவர். மனிதனின் நினைவுகளை அவர் அறிகிறவர். ஆகவே அவர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னைப் பெலப்படுத்தி, உன்னைக் காத்துக்கொள்ளுவார்.