ஏப்ரல் 26
“உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்” (சங்கீதம் 73:24).
எவ்வளவு அருமையான நம்பிக்கையை சங்கீதக்காரன் வெளிப்படுத்துகிறார் என்பதை நாம் பார்க்கும் பொழுது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. நாம் எப்பொழுதும் நம்முடைய ஆலோசனையின்படி நடப்பதை விரும்பக் கூடாது. ஆண்டவருடைய கரத்தில் நம்முடைய அனைத்துக் காரியங்களையும் ஒப்புக்கொடுத்து, ஆண்டவரே உம்முடைய ஆலோசனையை எனக்குத் தந்து என்னை வழிநடத்தும் என்று நாம் அவரிடத்தில் கேட்க வேண்டும். அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் தங்களுடைய யோசனைகளின்படி நடக்க விரும்பும் பொழுது, அது அவர்களின் தோல்விக்கு காரணமாக இருக்கிறது. ஆகவே அதைக் குறித்து நாம் எப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும். மேலும் நாம் மகிமையில் பிரவேசிப்பதே நம்முடைய முக்கியமான குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்த உலகம் ஒரு அநீதியான உலகம். இங்கு நாம் வாழ்வதில் அதிகமான ஈடுபாடு இல்லாமல், நித்தியத்தைக் குறித்த மனம் நம்மில் அதிகமாக காணப்பட வேண்டும்.
“கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்.” (2 தீமோத்தேயு 4:18) என்று பவுல் சொல்லுகிறார். இது எவ்வளவு ஒரு பெரிய நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது. எல்லாத் தீமையினின்றும் நம்மை காத்து இரட்சிப்பார். அநேக தீமைகள் நம்மைச் சூழ்ந்திருக்கிறது, நமக்குள்ளும் இருக்கிறது. அநேக தீமைகளால் நாம் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம், பாதிக்கப்படுகிறோம். பல விதங்களில் இவ்விதமான காரியங்களினால் நாம் நெருக்கப்படுகிறோம். ஆனாலும் கூட எல்லாவற்றிலும் அவர் நம்மை இரட்சித்து, காத்து கடைசியில் தம்முடைய மகிமையான ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்ள நிச்சயம் உதவி செய்வார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
நாம் ஒவ்வொரு நாளும் கர்த்தாவே உமது ஆலோசனையின்படி என்னை நடத்தும் என்று ஜெபித்து ஒப்புக்கொடுக்கும்போது நிச்சயமாக ஆண்டவர் நம்மை சரியான பாதையில் வழி நடத்துவார். நமக்கு இந்த உலகில் மெய்யான பாதுகாப்பு என்பது கர்த்தருடைய ஆலோசனையின்படி நடப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?