டிசம்பர் 5
“நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்”(நீதி 10:28).
நீதிமான்களின் நம்பிக்கையானது மகிழ்ச்சியானது, விலையேறப்பெற்றது. அந்த நம்பிக்கையானது தேவன் பேரில் இருக்கும் ஜீவனுள்ள நம்பிக்கை. ஆகவே அது நிச்சயமாக மகிழ்ச்சியைக் கொண்டுவரும். உன்னுடைய நம்பிக்கை வீண் போகாது. அது மகிழ்ச்சியான முடிவை கொண்டுவரும் என்பதில் சந்தேகமேயில்லை. “ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்”(சங்கீதம் 16:9) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறதைப் பார்க்கிறோம். உன்னுடைய வாழ்க்கையில் அவநம்பிக்கைக்கு இடம் கொடாதே. நம்பிக்கையோடே இருக்கும்பொழுது நாம் சந்தேகப்பட வேண்டிய அவசியமேயில்லை.
அநேக சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கும் பாடுகளின் மத்தியில், நம்முடைய விசுவாசத்தைப் பயிற்சிவிக்கும் படியாக தேவன், அவ்விதமாக அனுமதித்து உள்ளார் என்பதை மறந்துவிடாதே. இன்னுமாக பவுல் “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்”(ரோமர் 12:12) என்று சொல்லுகிறார். நம்பிக்கை நம்முடைய வாழ்க்கையில் தொய்வை அகற்றிவிட்டு, சந்தோஷத்தைக் கொண்டுவரும்.
துன்மார்க்கனின் நம்பிக்கை அழிந்துவிடும். ஆனால் நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும். இவ்விதமான சூழ்நிலைகள் உங்களுடைய வாழ்க்கையில் வரும்பொழுது, உங்களுடைய நம்பிக்கை பலன் கொடுக்காதத்தைப் போல இருக்கும்பொழுது சோர்ந்துபோகாதே. நம்பிக்கையிலே சந்தோஷமாக இருப்பது மாத்திரமல்ல, பொறுமையாய் இருங்கள். ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள். முடிவு நிச்சயம் உண்டு, அது மகிழ்ச்சியே.