‘அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்.’
(யோபு 13 : 15)
யோபு, தன் சோதனையின் கடுமையான வேளையில் இவ்விதம் விசுவாசத்தை வெளிப்படுத்தினார். இதுதான் மெய்யான விசுவாசம். அநேகர் தான் விசுவாசியென்றும், தனக்கும் மெய்யான விசுவாசம் இருக்கிறது என்றும் எண்ணிக்கொள்ளுகிறார்கள். ஆனால் சிறிய சோதனை வந்தாலும் அவர்களுக்கு மெய்விசுவாசம் இல்லை என்பதை வெளிப்படுத்தி விடுகிறார்கள். உங்கள் விசுவாசம் எவ்விதமானது என்பதை சோதித்தறியுங்கள். ஏனென்றால் மெய்விசுவாசம் இல்லாமல் ஜீவிப்பதைக் காட்டிலும் ஆபத்தானது வேறொன்றுமில்லை. மெய்விசுவாசம் இல்லையென்றால் நீ பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது. உன்னை பரலோக ராஜ்யத்திற்கு எடுத்துச்செல்லமுடியாத விசுவாசத்தால் என்ன பயன்? நீ எவ்வளவுதான் இந்த உலகத்தில் வாழ்ந்து சுகித்திருந்தாலும் முடிவில் நித்திய தேவராஜ்யத்திற்கு புறம்பாய்க் காணப்படுவதைக் காட்டிலும் வேதனையானது ஒன்றுமில்லை.
சோதனை ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அவ்வப்பொழுது தேவனால் அனுமதிக்கப்படுகிறது. பேதுரு இவ்விதம் எழுதுகிறார். ‘பிரியமானவர்களே, உங்களை சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்’ (1 பேதுரு. 4: 12, 13 ) என்று எழுதுகிறார். ‘துக்கப்பட்டுக் கொண்டிராதேயுங்கள் சந்தோஷப்படுங்கள்.’ தீமையிலும் நன்மையைக் காண்பதுதான் விசுவாசம். தேவனுடைய சித்தமில்லாமல் எனக்கு எதுவும் நேரிடாது. அவர் என்னுடைய வாழ்க்கையில் எதை அனுமதித்திருந்தாலும் அது நன்மைக்கே. என்னுடைய ஆத்துமாவின் பிரயோஜனத்திற்காகவே இதை அனுமதிக்கிறார். என்பதை நான் அறிவேன். ஆகவே நான் சோர்ந்து போகிறதில்லை. கர்த்தரை இந்த சோதனைக்காகவும், சோதனையின் மத்தியிலும் துதிப்பேன். அப்பொழுது அது ஆண்டவருக்குப் பிரியமாய் இருக்கும். கர்த்தருடைய நாமம் மகிமைப்படும். தடைக்கல்லை படியாய் மாற்றுவதே மெய்விசுவாசம்.