ஜூன் 29                       

“உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு” (நீதி 3:9).

      நம் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். அது என்னவென்றால், நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் கர்த்தரைக் கனம்பண்ண வேண்டும். மேலும் நாம் எதைச் செய்தாலும் அதைக் கர்த்தரின் மகிமைக்கென்று செய்யவேண்டும். கர்த்தரின் மகிமைக்கென்று செய்யும் படியான ஒவ்வொரு காரியமும் கர்த்தருக்குக் கனத்தைக் கொடுக்கிறது. இந்த வசனத்தில் கடவுள் ‘உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு’ என்கிறார். இன்றைக்கு அநேகர் தேவனுக்கென்று செலுத்தும்படியான தசமபாகங்களையும், காணிக்கைகளையும் செலுத்துவதில் விருப்பம் கொள்ளுவதில்லை. அப்படியாக நாமும் செய்வோமானால் கர்த்தரை நாம் கனவீனம் பண்ணுகிறோம் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். நாம் கர்த்தரைக் கனம்பண்ணும்பொழுது, “அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்” (நீதி3:10) என்று வேதம் சொல்லுகிறது.

      நம்முடைய வாழ்க்கையில் தேவன் அருளின விளைவின் பலனால் அவரைக் கனம்பண்ணுவோம். நம்முடைய வாழ்க்கையின் மூலமாக, செயல்களின் மூலமாக, இருதயப்பூர்வமாகக் கர்த்தரைக் கனம்பண்ணக் கற்றுகொள்வோம். பொதுவாக தேவன் நம் வாழ்க்கையில் செய்திருக்கிற ஒவ்வொன்றும் அவர் நமக்கு ஈவாக கொடுத்தது என்பதை உணரவேண்டும். நம்முடைய உடல் ஆரோக்கியம், செல்வம், கல்வி இவையனைத்தும் அவருடைய ஈவாகும். அது நம்முடைய பலத்தினால் பெற்றுக்கொண்டது என்று நாம் எண்ணுவோமானால் அது மதியீனமாகும். கடவுள் ஒரு காரியத்தைத் தடை செய்தால் நாம் எவ்வாறு அதை பெற்றுக்கொள்ள முடியும்? ஆகவே நம் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் தேவனைக் கனம்பண்ண வேண்டும் என்கிற உணர்வைக் கொண்டிருக்கவேண்டும். கர்த்தரை நாம் கனம்பண்ணும்பொழுது அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார்.